

ஆடிப்பெருக்கு: ஆகஸ்ட் 3
சோழ வளநாடு எனப் புகழ் பெற்ற தஞ்சை டெல்டா பகுதிகளில் காவிரியும் அதன் துணை ஆறுகளும் நீர் பெருக்கெடுத்தோடும் காட்சியை மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துச் செல்வார். அப்போதுதான் வயல்களில் நீர் பாய்ச்சி
நாற்று நடும் வேலை தொடங்கும். இப்படி மக்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும் இன்பத்தையும் விளைவிக்கும் ஆற்றுக்கும், வெள்ளமாகப் பெருக்கெடுத்தோடும் நீருக்கும் நன்றி தெரிவிக்கும் விழாதான் ஆடிப் பதினெட்டு.
இது தங்களை வாழ்விக்கும் காவிரி அன்னைக்கும், மழைக்கும், ஆற்றில் பெருக்கெடுத்தோடும் நீருக்கும் நன்றி சொல்லும் விழா. சிவபெருமான் கருணையால் பார்வதிதேவி தம் மக்களை வாழ்விக்க அருளிய அமிர்தமே ஆற்று நீர் எனக் கருதி அந்த அம்மனுக்கு வழிபாடு நடத்துவது மரபு.
காவிரியின் கருணையினால் விளைந்த நெல்லை அரிசியாக்கி அந்த அரிசியில் பலவகை உணவைச் செய்து படைத்தல் என்பது காலங்காலமாக இருந்து வரும் பழக்கம்.
இது குறித்து புராணக் கதையொன்றும் உண்டு. சிவபெருமானைக் குறித்து பார்வதி தேவியார் தவம் செய்த மாதம் இது என்பதே அந்தக் கதை. பூமாதேவி அவதரித்ததும் இந்தப் புனிதமான மாதத்தில்தான் என்கிறது புராணச் செய்தி.
கிராமப்புறங்களில் அம்மனை பச்சையம்மன், கன்னியம்மன் எனப் பல பெயர்களில் அழைக்கின்றனர். இதிலிருந்தே இயற்கையையும், நீர்வளத்தையும், நிலவளத்தையும் குறிக்கும் விதமாக அம்மனின் பெயர்கள் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
நீரால் அமைந்த உலகு
இந்தியாவில் கங்கை, யமுனை, கோதாவரி, காவிரி போன்ற ஆறுகள் பெண்கள் பெயரில் அமைந்திருப்பதையும், அவை புனித நதிகளாக வழிபடப்படுவதையும் பார்க்கிறோம். மனிதனுடைய அன்றாடத் தேவைகளில் பஞ்ச பூதங்களில் ஒன்றான நீர் முக்கிய இடம் வகிக்கிறது.
மழை உருவில் வரும் நீரையும், அந்த நீர் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் ஏரி, குளம், கிணறு ஆகியவற்றோடு ஆறாக ஓடிவரும் நீர்நிலைகளையும் மக்கள் வணங்கி வழிபடுகிறார்கள். நீரின் புனிதத்தைக் குறிக்கும் வகையில்தான் கோயில்களில் எல்லாம் கிணறுகள் வெட்டப்பட்டு அதிலிருந்து நீர் எடுத்து சிலை உருவங்களுக்கு அபிஷேகங்கள் செய்கின்றனர்.
காவிரியில் காதோலை, கருகமணி, வளையல் இவற்றை விட்டு அன்னையை அலங்கரிப்பதாக எண்ணி வழிபடுகிறார்கள். இளைய பெண்கள் முதிய பெண்மணிகளை வணங்கி தாங்கள் புதிதாக மாற்றிக்கொண்ட தாலிக்கயிற்றில் மஞ்சள் குங்கும் இடச் செய்து ஆசி பெறுவார்கள்.
காவிரி நதிக்கரையோரம் அமைந்திருக்கும் சின்னஞ்சிறு கிராமங்கள்கூட திருவிழாக் கோலம் பூண்டு காணப்படும். இளைஞர்கள் ஆற்றங்கரைகளில் வீரவிளையாட்டுகளில் ஈடுபடுவர். பொதுவாகச் சிலம்பாட்டம், கபடி போன்ற ஆட்டங்களில் ஈடுபட்டு மகிழ்வார்கள். இளம் பெண்கள் கும்மி, கோலாட்டம் போன்றவற்றை ஆடியும், சிறு குழந்தைகள் மண்ணில் உருவங்கள் செய்து அதில் பூக்கள் வைத்து பூஜை செய்வதுபோல விளையாடியும் மகிழ்வர்.
புறநானூறு காட்டும் பெருக்கு
சிறுவர்கள் ஆற்றில் விளையாடி மகிழ்வது குறித்து, புறநானூற்றில் ஒரு பாடல் இருக்கிறது. ஆசிரியர் பெயர் தெரியாததாலோ என்னவோ, அந்தப் பாடலில் வரும் வருணனையையே அவருக்குப் பெயராகச் சூட்டியிருக்கிறார்கள். அவர் பெயர் 'தொடித்தலை விழுத்தண்டூன்றினார்'.
இனிநினைந்து இரக்கம் ஆகின்று;
திணிமணல்
செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்,
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து,
தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி,
மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து,
நீர்நணிப் படிகோடு ஏறிச், சீர்மிகக்,
கரையவர் மருளத், திரையகம் பிதிர,
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,
குளித்துமணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே! யாண்டுண்டு கொல்லோ-
"தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி,
நடுக்குற்று,
இருமிடை மிடைந்த சிலசொல்
பெருமூ தாளரோம்" ஆகிய எமக்கே?
வயதான முதியவர் ஒருவர் வெள்ளப் பெருக்கில் கரை நிறைந்தோடும் காவிரிக் கரையில் தளர்நடை போட்டு கையில் தடியூன்றி, கண் பார்வை மங்கிப் போனதால் கண்களுக்கு மேலாகக் கையை விரித்து வைத்துக்கொண்டு போகிறார். அங்கு ஆற்று மணலில் பாவை பொம்மை செய்து, அதற்கு மலர் வைத்து விளையாடும் சிறார்களைப் பார்க்கிறார்.
உடலை மறைக்க ஆடைகளின் அவசியம்கூட உணராத விவரம் அறியாத சிறு வயதினர். அப்போது இவருக்குத் தன் கடந்த கால நினைவுகள் மனதில் ஓடத் தொடங்குகின்றன. அடடா! அந்த நாளில், நானும் இவர்களைப் போல ஆடித் திரிந்தேனே! ஆற்றோரம் பெருத்து உயர்ந்த மருத மரத்தின் மீதேறி, ஆற்று நீரின் மேல் கவிந்து நிற்கும் கிளையொன்றில் தாவி, கரையில் நிற்போர் பார்த்து, ஐயோ, இந்தச் சிறுவன் இப்படி நிற்கிறானே, ஆற்று வெள்ளத்தில் விழுந்தால் என்ன ஆகும் என்று பயந்து நடுங்க, அந்த ஆற்று வெள்ளத்தில் 'துடும்' என்று ஓசையெழுப்பும்படி பாய்ந்து குதித்து நீரில் மூழ்கி அடியில் சென்று அங்கிருந்து கைப்பிடி மண்ணை எடுத்துக் கொண்டு வந்து காட்டிய வீரத்தை நினைத்துப் பார்க்கிறார்.
அப்படி இருந்த நான் இப்போது இப்படி கைகள் நடுங்க, கண்கள் பார்வை மங்கித் தேய, உடல் நடுக்கம் எடுத்து, இருமலுக்கிடையே ஒரு சில சொற்கள் மட்டும் பேசும் பெரும் மூதாளனாக ஆகிவிட்டேனே என்று வருந்துவதாக அமைந்த பாடல் இது.
ஆடிப் பெருக்கில் மற்றொரு அம்சம் முளைப்பாரி எடுப்பது. ஆற்று நீர் பெருக்கினால் தானியங்கள் விளைச்சல் அதிகரிக்க அம்மன் அருள் புரிய வேண்டுமென்று 'முளைப்பாரி' எடுத்து வந்து ஆற்று நீரில் கரைப்பார்கள். அந்த நேரம் பெண்கள் கூட்டங் கூட்டமாக கும்மி அடித்து அம்மனை வழிபடும் காட்சியைக் காண ஊரே திரண்டு வந்து நிற்கும்.
- தஞ்சை வெ. கோபாலன் | தொகுப்பு: சி. கதிரவன்