Last Updated : 16 Aug, 2018 10:55 AM

 

Published : 16 Aug 2018 10:55 AM
Last Updated : 16 Aug 2018 10:55 AM

ஆன்மா என்னும் புத்தகம் 16: ஆன்மிகக் கடைக்குச் செல்ல வேண்டியதில்லை

வஜ்ரயான பவுத்தத்தை மேற்கு நாடுகளுக்குக் கொண்டு சென்ற பவுத்த அறிஞர்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் சோக்யம் ட்ருங்க்பா. இவர் 1970-களில் கொலராடோ மாகாணத்தில் நரோபா பல்கலைக்கழகம், ஷம்பலா மலை மையம் போன்ற பவுத்த கல்வி மையங்களை உருவாக்கினார்.

இவர் 1970 -71-ம் ஆண்டுகளில் ஆற்றிய உரைகளை அடிப்படையாக வைத்து தொகுக்கப்பட்ட நூல் ‘கட்டிங் த்ரு ஸ்பிரிச்சுவல் மெட்டீரியலிசம்’ (Cutting through Spiritual Materialism). அந்தக் காலகட்டத்தில் இவர் கொலராடோவில் பல இடங்களில் தியானப் பயிற்சி மையங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது பல மாணவர்கள் ஆன்மிகப் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைமுறைக்கு ஒவ்வாத எதிர்பார்ப்புகளுடன் அவரை அணுகினார்கள். அவர்கள் உண்மையைக் கண்டறிவதில் விருப்பமுள்ளவர்களாகத் தோன்றினாலும் சுயதிருப்தி அடைவதற்காகவே இந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்க விரும்பினார்கள் என்கிறார் ட்ருங்க்பா.

பல விதமான ஆன்மிகப் பயிற்சிகளை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து மேற்கொண்டுவருபவர்களுக்கு இந்தப் புத்தகம் அதிர்ச்சியளிப்பதாக இருக்கும்.  ஆன்மிகச் செறிவுவாய்ந்த மனிதர்களாக முயற்சித்துகொண்டிருப்பதற்குப் பின்னால் அகந்தையே செயல்படுவதாக சோக்யம் ட்ருங்க்பா சுட்டிக்காட்டுகிறார்.

ஞானத்தை அடையும் நோக்கத்தில் நாம் எந்த மாதிரியான பொறிகளுக்குள் சிக்கிக்கொள்கிறோம் என்பதை இந்தப் புத்தகத்தின் முதல் பாதி விளக்குகிறது. இரண்டாவது பாதியில் உண்மையான ஆன்மிகப் பயணத்தை மேற்கொள்வதற்கான கருத்தாக்கங்களான போதிச்சத்வம், வெற்றிடநிலை போன்றவற்றை விளக்குகிறது.

பொருள்முதல்வாதத்தின் கடவுள்கள்

திபெத்திய பவுத்தத்தில் பொருள்முதல்வாதத்துக்கு மூன்று கடவுளர்கள் இருக்கிறார்கள். வடிவம் (Form), உரை (Speech), மனம் (Mind) என்று அவர்கள் வகைப்படுத்தப் படுகிறார்கள். இதில் வடிவங்களுக்கான கடவுள் கையாளக்கூடிய, பாது காப்பான, கணிக்கக்கூடிய, மகிழ்ச்சியான உலகைக் கட்டமைப்பதற்கான நமது முயற்சிகளைக் குறிப்பதாக ட்ருங்க்பா விளக்குகிறார்.

கணிக்க முடியாத வாழ்க்கைக்குப் பதிலடிக் கொடுக்கும்வகையில், “நாம் எதிர்கொள்ளும் எரிச்சல்களைத் தவிர்த்து பாதுகாப்பாகத் தன்னை வைத்துகொள்வதே அகந்தையின் லட்சியமாக இருக்கிறது” என்கிறார் அவர். உரைகளுக்கான கடவுள், யதார்த்தங்களிலிருந்து தப்பிப்பதற்காக அனைத்தையும் கருத்தாக்கங்களாக வகைப்படுத்தவும் மாற்றவும் செய்யும் நமது முயற்சிகளைக் குறிக்கிறார். மனத்தின் கடவுள், தனித்துவமான சுயத்தை இழந்துவிடாமல் விழிப்புடன் இருப்பதற்கான நமது முயற்சிகளைக் குறிக்கிறார்.

உலகத்துடனான தொடர்புகளை அறுத்து கொண்டு, வாழ்க்கையின் எரிச்சல்களைத் தவிர்த்து கடவுளுக்கு அருகில் இருப்பதற்காக மலைகளிலும், குகைகளிலும் வாழ்பவர்களை ‘மனத்துக்கான கடவுளி’ன் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம்.

ஆன்மிகப் பொருள்முதல்வாதம்

அகந்தையின் திண்மை என்பது புதிதாக எதையும் உள்வாங்கிக் கொள்ளமுடியாமல் தடுக்கிறது. அதனால் அது உண்மையில் ஆன்மிகப் பயிற்சிகளை மட்டுமே பின்பற்றுகிறது. அகந்தையை வெளியேற்றும் முயற்சியில் அதுவே ஏன் ஈடுபடப்போகிறது என்ற கேள்வியை முன்வைக்கிறார் ட்ருங்க்பா. அகந்தை தன் அடையாளத்தை இழக்க நேரிடும் எந்த முயற்சியிலும் இறங்குவதில்லை.

‘சமயம்’ என்பதன் மூலம் தன் அடையாளத்தைக் காத்துக்கொள்ளலாம் என்று அகந்தை நினைத்தால், அந்த வழியில் அது பயணிக்கிறது. இதை அகந்தை உணர்வின் மற்றொரு நிலையாகப் பார்க்கலாம். இந்த முறையில் ஆன்மிகப் பொருள்முதல்வாதம் செயல்படுகிறது. ஆனால், உண்மையில் ஆன்மிகம் என்பது நமது நடத்தை, விழிப்பைக் கையாளும் அகந்தையின்  நிலைகளிலிருந்து விலகியிருப்பதே ஆகும்.

உண்மையான ஆன்மிகப் பாதை

வீரதீரமான ஆன்மிகத் தேடலுக்கான செயல்களை அகந்தை விரும்புகிறது. ஒரு வாரத்தை முழுமையாகத் தியானத்தில் செலவிடுவது, அசைவத்திலிருந்து சைவ உணவுக்கு மாறுவது போன்ற செயல்களை இதற்கு உதாரணங்களாக முன்வைக்கிறார் ட்ருங்க்பா. இந்த மாதிரியான செயல்கள் நமக்கு ஆன்மிகப் பாதையில் பயணிப்பதைப் போன்ற ஒருவிதமான மாயத் தோற்றத்தை உருவாக்கும். ஆனால், உண்மையில் அப்போதும் நாம் நாமாக மட்டுமே இருக்கிறோம்.

அகந்தையை விட்டு வெளியேறும் அனைத்து முயற்சிகளையும் கட்டுப்படுத்துவதை மட்டுமே இதன்மூலம் நாம் எதிர்கொள்கிறோம். அதனால், இந்த ஆன்மிகக் கடையில் பொருட்களை வாங்குவதை நிறுத்திவிட்டு, நாம் நாமாக இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்று சொல்கிறார் அவர். உண்மையான ஆன்மிகப் பயணத்தில் பயணிக்கும்போது நமது பாசாங்குத்தனத்தைப் பார்த்து நம்மால் சிரிக்கமுடியும். ஆனால், போலியாக அகந்தையைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் தங்களது நகைச்சுவை உணர்வை முற்றிலுமாக இழந்துவிடுகிறார்கள்.

அவர்களுக்கு எல்லாமே கருப்பு வெள்ளையாக மாறிவிடுகிறது. அவர்கள் தங்கள் ‘வாழ்க்கைப் பாதை’யைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கற்பனை செய்துகொள்கிறார்கள். ஆனால், உண்மையான ஆன்மிகம் மிகவும் சாதாரணமானதும் கடினமானதுமாகும். அதில் நமது நம்பிக்கைகளை ஒப்படைத்துவிட்டு ஏமாற்றங்களுக்குப் பழகிக்கொள்ள வேண்டியிருக்கும். “ஏமாற்றங்களை ஏற்றுகொள்வது அறிவின் அடையாளமாகும். ஏனென்றால், அது நமது அகந்தை, கனவுகளின் இருப்பை நிராகரிக்கிறது” என்று விளக்குகிறார் ட்ருங்க்பா.

நாம் வாழ்க்கையின் சூழ்நிலைகளை அதன் போக்கில் பார்க்கத் தயாராக இருக்க வேண்டும். அதை ஆன்மிகமாகவோ மறைபொருளாகவோ பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பதை இந்தப் புத்தகம் அழுத்தமாகப் பதிவுசெய்கிறது.

சோக்யம் ட்ருங்க்பா ரின்போச்சே

இவர் 1939-ம் ஆண்டு கிழக்கு திபெத்தில் பிறந்தார். ‘கக்யு’ வம்சத்தைச் சேர்ந்த திபெத்திய ஆசிரியர்கள் நடத்திவந்த தியானப் பள்ளியின் 11வது துல்குவாக இவர் இருந்திருக்கிறார். இவர் தன் பதின்பருவத்தின் பிற்பகுதியிலேயே சுர்மங் மடாலயங்களின் மடாதிபதியானார். 1959-ம்

ஆண்டில் சீனா, திபெத்தைக் கைப்பற்றிய பிறகு, இந்தியாவில் டல்ஹவுசியில் இயங்கிவரும் இளம் லாமாக்களுக்கான பள்ளியில் ஆசிரியராகச் சில ஆண்டுகள் பணியாற்றினார். சமய ஒப்பீடுகள், தத்துவம், கலை தொடர்பாகப் படிப்பதற்காக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு நிதி நல்கையின் மூலம் 1963-ம் ஆண்டு சென்றார். 1967-ம்

ஆண்டு, ஸ்காட்லாந்தின் முதல் திபெத்திய பவுத்த பயிற்சி மையத்தைத் தொடங்கினார். ஆனால், ஒரு கார் விபத்தில் இடது பக்கத்தில் பகுதியளவு பக்கவாதத்தால் அவர் பாதிக்கப்பட்டார். அதன்பிறகு, தன் உறுதிமொழிகளை ரத்துசெய்துவிட்டு, திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் குடியேறினார். 1970-களில் அமெரிக்காவின் பல பகுதிகளில் தியானப் பயிற்சி மையங்களைத் தொடங்கினார். இவர் பயன்படுத்திய “egolessness” என்ற பதம் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் இணைக்கப்பட்டிருக்கிறது. 1987-ம் ஆண்டு இவர் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x