Published : 16 Aug 2018 10:55 AM
Last Updated : 16 Aug 2018 10:55 AM

சூபி இசை: நாம்தான் காதுகளைத் திறக்க வேண்டும்!

“நீ எதைத் தேடுகிறாயோ, அது உன்னைத் தேடுகிறது.”

- ஜலாலுதீன் ரூமி, 13-ஆம் நூற்றாண்டில் பாரசீகத்தில் வாழ்ந்த சூஃபி ஞானி

சூபி இசை எனும் சமுத்திரத்தில், வாழ்வின்  சில அரிய கணங்களில் கால் நனைத்திருந்தாலும், நிகழ்ச்சியின் பாடகர்களான சமீர் பின்சி இமாம் மஜ்பூரை எனக்குப் பரிச்சயம் கிடையாது.  மழை தூறிக்கொண்டிருந்த அன்று மாலை, ரஷ்ய கலாச்சார மையத்தில் நிகழ்ச்சி. முதலில் சூஃபி இசை குறித்த சிறு அறிமுகத்தை சமீர் பின்சி வழங்க, “யார் கோ ஹம்னே ஜா பஜா தேகா” (நான் காணும் எல்லாவற்றிலும் உன்னையே காண்கிறேன் காதலே!) எனும் புகழ்பெற்ற ஆபிதா பர்வீனின் பாடலுடன் நிகழ்ச்சியைத் தொடங்கினார்கள்.

பாடலின் கடைசி சரணத்துக்கு முன்பு, அந்தப் பாடலின் மையப் பொருளை நாராயண குருவின் வரிகளில் மலையாளத்திலும், திருக்குறள் வரிகளில் தமிழிலும் சமீர் பின்சி பாடிக்காட்டிய பொழுது, அரங்கம் அதிர்ந்தது. அதன் பின்னர் ஒவ்வொரு பாடலிலும் இதே பாணியை அவர் செய்து காட்டினார். மதங்களை கடந்து மக்களை இணைக் கும் சூபி இசையை, மொழிகளையும் தொட்டு கடப்பதன் மூலம் மக்களிடம் இயல்பாக கொண்டு சேர்க்க முயலும் சமீரின் முயற்சி பாராட்டுக்குரியது. அது மட்டுமில்லாமல், ஒவ்வொரு பாடலுக்கும் அதற்கு பொருத்தமான ரூமியின் ஓரிரு ஆழமான கவிதை வரிகளைச் சொல்லி, சர்வசாதாரணமாக திறப்புகளை நிகழ்த்திச் சென்றார்.

ஹமாரே ராம் ரஹிம்

அடுத்து வந்த ஆபீதா பர்வீனின் “ஹம் கோ யான் தர் தர் ஃபிராயா யார் நே” (எல்லா இடங்களிலும் எனைத் தேடி அலைய வைத்தாய் அன்பே, ஆனால் எங்குமில்லாத ஓரிடத்தில் உனது வீட்டைக் கட்டிக்கொண்டாய் அன்பே) எனும் பாடல், காதலரின் முன்பும் கடவுளின் முன்பும் மாத்திரமே அடங்கி அழியும் கர்வத்தின் உணர்வை ஒருங்கே உண்டாக்கி குறுக வைத்தது. அதிலும், குறிப்பாக “நீ உன்னைப் பார்ப்பதற்கான கண்ணாடியாக என்னை வைத்திருக்கிறாய்” எனும் வரியெல்லாம்… இசையின் மூலமாக அத்வைதக் கருத்தைகூட கவித்துவமாக சொல்ல முடிகிற சாத்தியம் உண்மையில் ஆச்சரியப்படுத்தியது.

இவ்வாறு பாகிஸ்தானியப் பாடகரான ஆபிதா பர்வீனின் பாடல்களை தொடர்ந்து பாடும் சமீரும் இமாமும், அடுத்ததாக இந்தியாவின் புகழ்பெற்ற மதநல்லிணக்க அடையாளமாக கருதப்படும் கபீர் தாஸின் “ஹமாரே ராம் ரஹிம்” (நமது ராமனும், ரஹீமும், கரீமும், கேசவனும், அல்லாவோடும், ராமனோ டும் ஒன்றாகவே படுத்துறங்கினர்) பாடலை பாடத் தொடங்கினர்.

இந்தப் பாடல் தொடங்கிய பொழுதே, அதன் உச்சத்தன்மையை அடைந்துவிடுகிறது. பின்னர், சரணத்தில் மென்மையடைந்து மதங்களுக்கு இடையிலான ஒற்றுமையை மெல்லத் தொட்டு, வேறுபாடுகளைக் களைய விழைகிறது. அதன் ஓங்கிய தொடக்கம் அப்படியே மனதில் நின்றுவிடுகிறது. இப்பாடலை பிரபல இந்துஸ்தானி பாடகர் சுபா முத்கலின் குரலில் கேட் பதும் ஒரு இனிமையான அனுபவமே.

இளைஞர்களின் களிப்பு

இன்று உலகமெங்கும் சூபி பாடல்களின் அடையாளமாக கொண்டாடப்படும், காலஞ்சென்ற கவ்வாலி பாடகர் நுஸ்ரத் ஃபதே அலிகானின் “சாசோன் கீ மாலா பே சிம்ரூ மேன் பி கா நாம்” (எனது மூச்சின் மாலையில் எனது காதலியின் பெயரை நான் முத்துக்களாகக் கோப்பேன்) பாடல், மீண்டும் உண்மையான காதலும் உண்மையான ஆன்மிகமும் இணையும் புள்ளிக்கு இழுத்துச் சென்றது.

குறிப்பாக, “காதலின் நிறத்தில் ஒரு நிறமாகும் வண்ணம், நான் எவ்வாறு மூழ்கினேன்” எனும் வரிகளை மீண்டும் மீண்டும் சமீரும் இமாமும் வெவ்வேறு விதமாகப் பாடி, அந்த சரணத்தின் உச்சத்தைத் தொட்டார்கள் பாருங்கள், ஒரு கணம் பிரமிப்பில் கைதட்டக்கூட மறந்துபோய் விட்டோம்.

தொடர்ந்து நுஸ்ரத்தின் “அல்லாஹூ அல்லாஹூ” பாடலில், அல்லாஹூ பல்லவியில் அவர்கள் விதவிதமாக நிகழ்த்திய ஸ்வர வேடிக்கைகள் பார்வையாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின. அவரது “தூ குஜா மன் குஜா” (நானோ பாதாளத்தில் இருக்கிறேன். நீயோ கற்பனைக்கு எட்டாத உயரத்தில் இருக்கிறாய்), “மேரே ரஷ்கே கமர்” (நிலவே பொறாமை கொள்ளும் அழகே – இப்பாடல் 'பாத்ஷாஹோ' எனும் சமீபத்திய இந்தி திரைப்படத்தி லும் இடம்பெற்றது) போன்ற குதூகலத்தின் உச்சத்தை தொடும் பாடல்களை பாடியபொழுது, அரங் கம் கொண்டாடித் தீர்த்தது. கல்லூரி இளைஞர்கள் மகிழ்ச்சியில் ஆடிக் களிப்பதை பார்க்கும்பொழுது ஏக்கம் உண்டானதை மறுப்பதற்கில்லை.

தமிழ் இல்லாமலா?

இடையில், “தமிழகத்தில் வந்து பாடிவிட்டு, குணங்குடி மஸ்தானின் பாடலைப் பாடாமல் போகலாமா?” எனக் கேட்டு தொடங்கிய சமீர், குணங்குடி மஸ்தானின் “முகில் கவியும் நயினார் முஹம்மது ரசூல் என்ற என்ற முத்தொளி இது என்பர் கோடி” எனும் பாடலை ஒரு அழகிய பரத அசைவு போன்ற மெட்டில் லயித்துப் பாடப் பாட, ஆசுவாசமும் புத்துணர்ச்சியும் அரங்கில் பரவியது.

“தாலோலம் பாடுன்ன தங்கச்சி பெண்ணினே”, “பட்டாப்பகலுச் சூட்டும் மின்னி” மற்றும் “மான ப்ரேமத்திலே மண் கூடானதிலே மேயுன் லைலா மாயா மாயா லோகத்தல்லோ லீலா” ஆகிய மூன்று மலையாளப் பாடல்கள் நிகழ்ச்சியில் பாடப்பட்டன. இவற்றை முதல்முறையாக அங்குதான் கேட்டேன். உருது, இந்திப் பாடல்களில் விளங்கியதை விடவும், மிகக் குறைவாகவே இப்பாடல்களில் பொருள் விளங்கியது. ஆனால், ஒவ்வொரு பாட்டும் மனதில் நிரந்தரமாக ஊடுருவி நிலைத்தன.

“தாலோலம்” பாடல் ஒரு மெல்லிய காற்றைப் போல வருடிச் சென்றது. ஆனால், “பட்டாப்பகலு” பாடலில், “ஈ துனியா ஒக்கே நடந்து.. பட்சே மனுஷனே கண்டில்லா.. யான் மனுஷனே கண்டில்லா..” எனும் இடத்தில் குரலை உயர்த்தி கதறுகையில், இந்த மொத்த உலகத்துக்காகவும் அவர்கள் கண்ணீரின்றி அழுது தீர்ப்பதாகப் பட்டது.

“மான ப்ரேமத்திலே” பாடலில், லைலாவுக்காக கசியும் மஜ்னுவின் உள்ளம், பிரபஞ்சத்தின் எல்லையில்லா லீலைகளை எண்ணிப் பாடும் பொழுது, மனம் சிறகடித்துப் பறக்கத் தொடங்குகிறது. லைலாவும் மஜ்னுவும் வெறும் குறியீடுகளே என்றாகிவிடும் பொழுது, அதன் பரிமாணம் முப்பரிமாண எல்லைகளை கடந்து விடுகிறது. அங்கே கடவுளை தேடுவோரும் இருக்கலாம். தொலைந்த காதலைத் தேடுவோரும் இருக்கலாம், இறந்தவரைத் தேடுவோரும் இருக்கலாம். இவை நெடுந்தூரம் நம்மோடு பயணிக்கும் வல்லமை உடையவை என உறுதியாகத் தோன்றுகிறது.

பொழிந்துகொண்டுதான் இருக்கிறது

இடையில் பாடப்பட்ட ரஹ்மானின் “க்வாஜா மேரே க்வாஜா” (கடவுளே என் கடவுளே) நுஸ்ரத்தின் ‘ஆதிக்கத்திலிருந்து’ சற்று விடுதலையளித்து மனதை இயல்புக்கு கொண்டுவந்தது. ஆனால், மீண்டும் நிகழ்ச்சியின் இறுதிப்பாடலாக, “தம் மஸ்த் கலந்தர்” (எனது மூச்சிலும், மயக்கத்திலும் நிறைந்த கலந்தரே – கலந்தர் என்பது சூஃபிக்களை குறிக்கும்) பாடலின் மூலம் தனது முழு தீவிரத்துடன் நுஸ்ரத் திரும்பி வந்தார்.

அந்தப் பாடலைக் கொண்டு மொத்த இசைக் குழுவினரும் உண்மையில் அதகளம் பண்ணினார்கள். “ஆலி, ஆலி, ஆலி” எனும் சொற்கள் சரணத்தில் வரும் இடங்களிலும், ஒவ்வொரு வாத்தியக் கருவியைக் கொண்டும் தனி ஆவர்த்தனங்களை இடையில் நிகழ்த்திக் காட்டியதன் மூலமும், பார்வையாளர்களை மகிழ்ச்சிப் பெருக்கில் ஆரவாரிக்க வைத்தார்கள்.

நந்திதா தாஸின் முதல் படமான ஃபிராக் (Firaaq), குஜராத் 2002 படுகொலைகளுக்குப் பிறகு, சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் மதத்தினரும் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் சிக்கல்களை, ஒரு கோட்டுச் சித்திரமாகக் காட்டியிருந்தது. இறுதிக் காட்சியில், ஒரு முதிய முஸ்லிம் பாடகரின் வீட்டில் கதாபாத்திரங்கள் அனைவரும் ஒன்றுகூடுவார்கள். அதன்மூலம், கலை குறிப்பாக இசை மாத்திரமே வெறுப்பின் திரைகளை அகற்றி ஒன்றுபடுத்தும் வல்லமையுடையது என்பதை காட்சிபூர்வமாக வெளிப்படுத்துவார். இசை என்றும் பொழிந்து கொண்டுதானிருக்கிறது. நாம்தான் காதுகளைத் திறக்க வேண்டும்.

சரவண ராஜா, தொடர்புக்கு: saravanaraja.b@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x