

ஞானமடைதல் எனும் பிரபஞ்சப் புதிரைக் குறித்து எவ்விதமாக விவரித்தாலும் அது சரியானதாகவும் இருப்பதில்லை அல்லது தவறு என்று கூறுவதற்குமில்லை.
அது இரண்டுமாகவும் இல்லை, இரண்டைக் கடந்தும் இல்லை. அறியக் கூடியதாகவும் இல்லை, அறிய முடியாமையாகவும் இல்லை அது. தேடலின் உச்சம் நமக்குள் உறைந்திருக்கும் எல்லாவித நுண்ணிய பதில்களையும் துரிதமாகவோ அல்லது மென்மை யாகவோ உதிரச் செய்கிறது என்று மட்டும் அறுதியிட்டுக் கூற முடியும். சூரியனின் கிரணங்களைப் போல அது எல்லாத் திசைகளிலும் வழிகளிலும் நடந்தேறியிருக்கிறது அல்லது புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.
கால, தேசத்திலிருந்து மேலெழுந்து உலகின் இதர ஞான மரபுகளையும் ஞானிகளையும் சற்றே பருந்துப் பார்வையில் பார்க்கும்போது மட்டுமே இதனைச் சற்றே புரிந்துகொள்ள முடியும். இவனோவிச் குர்ட்ஜிப் கண்ட டைந்த அல்லது புரிந்து கொண்ட, அல்லது விட்டு விடுதலையான விதம் முற்றிலும் வேறுபட்டது. கார்ஸ் இராணுவ மையத்தின் பீரங்கிக் குண்டுவீச்சில் மரணத்தின் விளிம்பைத் தொட்டு மீண்ட கணத்தில் குர்ட்ஜிப்பின் இருப்பில் ஒரு விரிசல் ஏற்படுகிறது.
இதோ என் கண்முன் நிகழ்ந்துகொண்டிருக்கும், நான் சாட்சியாயிருக்கும் இந்த ஆழ்வு மெய்யானதுதானே? அது எங்கிருந்து தொடங்கியது, எங்கே முடியப் போகிறது என்று ஒரு ஆழமான ஐயம் வலுப்பெறத் தொடங்கியது. இம்மாதிரி நிகழ்வுகள் ஒரு முட்டையின் உள்ளிருந்து விழுந்த விரிசல் போலவே, விரிசலாகி விட்டாலும் அது முழுமையாக உடைந்து, உள்ளிருந்து பறவை வெளியேறக் குறுகிய அல்லது நீண்ட காலமாகலாம். அது துரிதமான உடைசலாகவும் இருக்கலாம். அல்லது உடைவதே தெரியாத மிக நுணுக்க மான நிகழ்வாகவும் இருக்கக் கூடும். இதுபோன்ற விரிசல் ரமண மகரிஷியின் வாழ்விலும் ஏற்படுகிறது.
ரமண மகரிஷியின் மரணானுபவமும் குர்ட்ஜிப்பின் மரண பயமும் ஒன்றே. ஆனால், அதன்பின் இருவரின் பயணமும் முற்றிலும் எதிர் துருவத்தில் ஒன்றோடொன்று முரண்பட்டுச் செல்வதை அறியலாம். இயற்கையில் அவ்வாறுதான் நிகழும். அது ஏன் ஒத்துப் போக வேண்டும்? மனித மனம் மட்டுமேதான் ஏற்கெனவே கற்றறிந்த, மூளையில் தேக்கிப் படிமானமாக்கப்பட்ட அனுபவங்களையே ஒப்பிட்டுத் தேடிக்கொண்டிருக்கும்.
ரமண மகரிஷியைப் பொறுத்தவரை இயற்கை அவரை எங்கும் செல்லாமல் ஓரிடத்திலேயே அமரவைத்து, அதனை முதிரவைத்தது. ஆனால், குர்ட்ஜிப்புக்கு அது முற்றிலும் மாறாக, உலகம் முழுவதும், அதுவும் ஆபத்தான போர்க்களங்கின் ஊடே உலாவர வைத்து விரிசல் விடச் செய்தது.
இது ரமணருக்கும் குர்ஜிட்புக்குக் கும் மட்டும் ஏற்படும் விரிசல் இல்லை, ஒவ்வொரு மனிதனுக்கும் தொடர்ந்து இது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. வெவ்வேறு வித அனுபவங்களி னூடே, பயத்தினூடே, துயரத்தினூடே, வறுமையினூடே, நெருக்கடிகளினூடே, அவமானங்கள் மற்றும் வலிகளினூடே சுய மரண பயம் அல்லது நெருங்கியவர்களின் மரணத்தினூடே அவ்வித விரிசல்கள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது.
அதனுடைய அழுத்தம் மற்றும் தீவிரத்தினைப் பொறுத்த அந்த விரிசல்கள் உடைந்து உள்ளிருக்கும் பறவை வெளியேறும் காலம் மாறும். ஜே. கிருஷ்ணமூர்த்தியின் சகோதரரின் மரணமே அவருடைய புரிதலின் தொடக்க விரிசல். ஆனால், அதிலிருந்து அந்தப் பறவை எப்போது வெளியேறியது என்றோ அதை அனுபவமாகவோ நிகழ்வாகவோ ஒருக்காலும் அவர் பதிவு செய்திருக்கவில்லை.
இதர ஞானாசிரியர்களின் பயணங்களும் இவ்வாறு தனித்தன்மை வாய்ந்தவையே. சிலருக்கு விரிசலுக்குப் பின் அந்தக் கணமே பறவையின் வெளியேற்றம் நிகழ்வதுண்டு. குர்ட்ஜிப்பிற்கும் இது பொருந்தும். கார்ஸ் பீரங்கி வீச்சில் அந்தச் சிறுவனின் இருப்பில் ஒரு விரிசல் தொடங்கியிருந்தாலும் அதற்குப் பின் பல்வேறு சூழல்களில் மேலும் வெவ்வேறு விரிசல்கள் ஏற்பட்டுக்கொண்டே போகிறது. அந்த விரிசல்களே தொடக்கத்திலும் முடிவிலும் அவ்வப்போதும் இந்தக் கதையில் சுட்டப்படுகிறதே தவிர, அவருடைய ஞான அனுபவத்தை அல்ல.
இந்தத் தேதியிலிருந்து அல்லது இந்த நேரத்திலிருந்து அல்லது இந்த அனுபவத்திலிருந்து நான் ஞானம் பெற்றேன் என்றோ, இந்தக் குறிப்பிட்ட காலத்திலிருந்து நான் தன்மாற்றமடைந்தேன் என்கிற குறிப்பையோ குர்ட்ஜிப் எங்குமே பதிவு செய்திருக்கவில்லை.
இதர ஞான மரபுகளினை ஊன்றிப் பார்த்தோமேயானாலும் எங்கோ ஒரு சில ஞானாசிரியர்களைத் தவிர வேறு எவரும் அதைக் காலத்தாலோ அனுபவத்தாலோ இணைத்துக் குறிப்பிட்டிருக்கவே இல்லை. ஒருவேளை அவ்வாறு சில ஞானிகள் குறிப்பிட்டிருந்தாலும், அது அவர்களுக்கு மாத்திரமேயானது, ஒவ்வொருவரின் தேடலும் நகர்தலும் புரிதலும் அசலானதாகும், முற்றிலும் புதியதாகும், அது யாரோடும் ஒப்பிட்டுப் பார்க்க இயலாது.
இவ்விஷயத்தை மிக நேரடியாகக் கூறுவதாயின் இங்கே ஒருக்காலும் முட்டையோ விரிசலோ அல்லது அதற்குள் பறவையோ எப்போதும் இருந்ததில்லை என்பதே சரி.
“வாத்து என்றென்றும் அடைபட்டிருக்கவில்லை”.
(‘நான்காம் தடம்’ புத்தகத்திலிருந்து ஒரு பகுதி)
நான்காம் தடம் தேடலும் விட்டுவிடுதலையாதலும் இரா. ஆனந்தக்குமார் விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோயம்புத்தூர் – 641 001 விலை : ரூ. 600 தொடர்புக்கு : 0422- 2382614 |