கிருஷ்ணன் சொன்ன சாதாரண ஞானம்

கிருஷ்ணன் சொன்ன சாதாரண ஞானம்
Updated on
1 min read

‘நான் எல்லாவற்றுக்கும் பிதா, என்னிடமிருந்தே எல்லாம் இயங்குகிறது. இந்தக் கருத்துடையோரான அறிஞர்கள் என்னை வழிபடுகிறார்கள்.’ என்று கிருஷ்ணன் சொல்கிறார்.

எந்த ஜந்துவுக்கும் இம்ஸை செய்வோர் உண்மையான பக்தராக மாட்டார். எந்த ஜீவனையும் பகைப்போர் கடவுளின் மெய்த்தொண்டர் ஆகார். எந்த ஜீவனையுங் கண்டு வெறுப்பெய்துவோர் ஈசனுடைய மெய்யன்பரென்று கருதத் தகார். மூட்டைப் பூச்சிகளையும் பேன்களையும் கொல்வோர் தெய்வ வதை செய்வோரேயாவார்.

‘அஹிம்ஸா பரமோ தர்ம’ :- ‘கொல்லாமையே முக்கிய தர்மம்’ என்பது ஹிந்து மதத்தின் முக்கியக் கொள்கைளில் ஒன்றாம். கொல்லாமையாகிய விரதத்தில் நில்லாதவன் செய்யும் பக்தி அவனை அமரத் தன்மையில் சேர்க்காது. மற்றோருயிரைக் கொலை செய்வோனுடைய உயிரைக் கடவுள் மன்னிக்க மாட்டார். இயற்கை கொலைக்குக் கொலை வாங்கவே செய்யும்.

இயற்கை விதியை அனுசரித்து வாழவேண்டும். அதனால் எவ்விதமான தீமையும் எய்த மாட்டாது. எனவே, சாதாரண புத்தியே பரம மெய்ஞ்ஞானம். இதனை, ஆங்கிலேயர் ‘common sense’ என்பர். சுத்தமான, மாசு படாத, கலங்காத, பிழைபடாத சாதாரண அறிவே பரம மெய்ஞ்ஞானாகும்.

சாதாரண ஞானத்தைக் கைக்கொண்டு நடத்தலே எதிலும் எளிய வழியாம். சாதாரண ஞானமென்று சொல்லும் மாத்திரத்தில் அது எல்லாருக்கும் பொதுவென்று விளங்குகிறது. ஆனால், சாதாரண ஞானத்தின்படி நடக்க எல்லாரும் பின்வாங்குகிறார்கள். சாதாரண ஞானத்தின்படி நடக்கவொட்டாமல் ஜீவர்களைக் காமக் குரோதிகள் தடுக்கின்றன. சாதாரண ஞானத்தில் தெளிவான கொள்கை யாதெனில், ‘நம்மை மற்றோர் நேசிக்க வேண்டுமென்றால், நாம் மற்றோரை நேசிக்க வேண்டும்’ என்பது.

நேசத்தாலே நேசம் பிறக்கிறது. அன்பே அன்பை விளைவிக்கும். நாம் மற்ற உயிர்களிடம் செலுத்தும் அன்பைக் காட்டிலும் மற்ற உயிர்கள் அதிக அன்பு செலுத்த வேண்டுமென்று விரும்புதல், சகல ஜீவர்களின் இயற்கையாக இயல் பெற்று வருகிறது. இந்த வழக்கத்தை உடனே மாற்றிவிட வேண்டும். இதனால் மரணம் விளைகிறது.

நாம் மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்த வேண்டும். அதனால் உயிர் வளரும், அதாவது நமக்கு மேன்மேலும் ஜீவசக்தி வளர்ச்சி பெற்றுக்கொண்டு வரும். நம்மிடம் பிறர் அன்பு செலுத்த வேண்டுமென்று எதிர்பார்த்துக்கொண்டும், ஆனால் அதே காலத்தில் நாம் பிறருக்கு எப்போதும் மனத்தாலும் செயலாலும் தீங்கிழைத்து கொண்டுமிருப்போமாயின் – அதாவது பிறரை வெறுத்துக்கொண்டும், பகைத்துக் கொண்டும், சாபமிட்டுக் கொண்டும் இருப்போமாயின் – நாம் அழிந்து விடுவோமென்பதில் ஐயமில்லை.

- மகாகவி பாரதியார், பகவத் கீதை உரையின் முன்னுரையிலிருந்து...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in