Last Updated : 09 Aug, 2018 10:20 AM

 

Published : 09 Aug 2018 10:20 AM
Last Updated : 09 Aug 2018 10:20 AM

விவிலிய மாந்தர்கள் 04: பூமியில் வாழ்ந்த கடவுளின் நண்பர்!

வன்முறையும் அதற்குக் காரணமான அதிகாரமும் பாவம் எனும் போர்வையால் பூமியை மூடியிருந்த காலம். அப்போது தன்னை அன்புகூர்ந்து விசுவாசிக்கிற வெகுசிலரோடு மட்டுமே கடவுள் உரையாடினார். அந்த வெகுசிலரில் ஒருவர் ஆபிரகாம். அவர் ஒரு பெரும் மக்கள் கூட்டத்தின் மூப்பர். அவர்களுக்குச் சிறந்த தலைவர். கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசியாகவும் இருந்தார்.

இந்த எல்லாக் குணங்களுக்கும் மேலாக அவர் கடவுளின் மீது பக்தியும் பயமும் அவரால் கூடாதது இந்த பூமியில் எதுவுமே இல்லை என்ற அசைக்க முடியாத விசுவாசமும் கொண்டவராக இறுதிவரை வாழ்ந்தார். அதனால் அவர் ‘விசுவாசத்தின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார். இன்று அனைவருக்கும் தேவைப்படும் இந்தக் குணத்தின் காரணமாக, கடவுளே ஆபிரகாமைத் தன் நண்பராகக் கருதினார் என்று ஏசாயா புத்தகத்தின் 44-வது அத்தியாயத்தின் 8-வது வசனம் ‘'என் நண்பனான ஆபிரகாமின் சந்ததியே' என்ற கடவுளின் கூற்று வழியாக நமக்குப் புலப்படுகிறது. அதேபோல் ரோமர் புத்தகம் அதிகாரம் 4-ன் 11-வது வசனம் ‘விசுவாசிக்கிற யாவருக்கும் தகப்பன்’ என்று ஆபிரகாமை விவிலியம் பெருமைப்படுத்துகிறது. இவ்வாறு விசுவாசத்தின் முன்மாதிரியாகக் கொண்டாடப்படும் ஆபிரகாம் அப்படி என்னதான் செய்தார்?

அவரது முழு வாழ்க்கையுமே கடவுள் மீதான விசுவாசத்தை வெளிக்காட்டும் சோதனைகள் நிறைந்ததாக இருந்தது. அந்தச் சோதனைகளில் எல்லாம் தலையானது ஒன்று உண்டு. தன் மகனைப் பலியாகச் செலுத்த வேண்டும் என்று கடவுள் கேட்டபோது, சிறிதும் தயங்காமல் அதை ஆபிரகாம் எதிர்கொண்ட விதத்தை, விவிலியத்தின் தொடக்க நூலான ஆதியாகமம் விவரித்துக் கூறுகிறது. அந்தப் பகுதியைக் கூர்ந்து கவனியுங்கள். அப்போது, கடவுளின் கட்டளையை எவ்வளவு உறுதியாக, பதற்றமின்றி அவர் பின்பற்றினார் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

கடவுளின் கோரிக்கை

ஆபிரகாமின் விசுவாசத்தைக் கடவுள் சோதித்துப் பார்த்தார். ஒருநாள் அவர், “ஆபிரகாமே!” என்று அழைத்தார். அதற்கு ஆபிரகாம், “சொல்லுங்கள் எஜமானே!” என்றார். அப்போது கடவுள், “நீ உயிருக்கு உயிராய் நேசிக்கிற உன்னுடைய ஒரே மகன் ஈசாக்கை அழைத்துக்கொண்டு மோரியா தேசத்துக்குப் போ. அங்கே நான் காட்டுகிற ஒரு மலையில் அவனைப் பலியாகக் கொடு” என்று கட்டளையிட்டார்.

அதை நிறைவேற்றுவதற்காக ஆபிரகாம் அதிகாலையில் எழுந்தார். தன்னுடைய கழுதைமேல் சேணத்தைப் பூட்டினார். பின்னர் தன்னுடைய மகன் ஈசாக்கையும் இரண்டு வேலைக்காரர்களையும் அழைத்துக்கொண்டு, தகன பலிக்கு வேண்டிய விறகுகளையும் வெட்டி எடுத்துக்கொண்டு கடவுள் குறிப்பிட்ட மோரியா தேசத்தின் மலைநோக்கிப் புறப்பட்டார்.

மூன்று நாள் பயணத்துக்குப் பின் மோரியாவின் மலை தென்பட்டது. தூரத்திலிருந்து அந்த மலையைப் பார்த்தார். பின் மலையை அடைந்ததும் தன் வேலைக்காரர்களிடம், “நீங்கள் இங்கேயே கழுதையுடன் காத்திருங்கள். நானும் என் மகனும் அங்கே ஏறிச்சென்று கடவுளை வணங்கிவிட்டு வருகிறோம்” என்று ஆபிரகாம் கூறினார்.

விறகு சுமந்த மகன்

பின்னர் தகன பலிக்கான விறகுகளை எடுத்து, தன்னுடைய மகன் ஈசாக்கின் தோள்மேல் வைத்தார். அது தன்னைப் பலியிடத் தேவைப்படும் நெருப்புக்கானது என்பதை அந்த இளைஞன் அறிந்திருக்கவில்லை. தந்தை கூறியதைத் தட்டாமல் செய்தார். அதன்பின் ஆபிரகாம் நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டார். தந்தையும் மகனும் ஒன்றாக நடந்து மலைமீது ஏறினார்கள்.

அப்போது ஈசாக்கு ஆபிரகாமிடம், “அப்பா...” என்றார். அதற்கு அவர், “என்ன மகனே?” என்று கேட்டார். அப்போது ஈசாக்கு, “நெருப்பும் விறகும் இருக்கின்றன. ஆனால், தகன பலி செலுத்த நம்மிடம் ஆடு இல்லையே?” என்று கேட்டார். அதற்கு ஆபிரகாம், “மகனே, தகன பலிக்கான ஆட்டைக் கடவுள் கொடுப்பார்” என்று சொன்னார். இருவரும் தொடர்ந்து நடந்து சென்று கடவுள் சொல்லியிருந்த இடத்தை அடைந்தார்கள். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தைக் கட்டினார். அதன்மேல் விறகுகளை அடுக்கினார்.

பின்னர், தன்னுடைய மகன் ஈசாக்கின் கைகளையும் காலையும் கட்டி, அடுக்கப்பட்ட விறகின்மேல் படுக்க வைத்தார். அதன்பின், தன்னுடைய மகனைக் கொல்வதற்காக ஆபிரகாம் கத்தியை எடுத்து தலைக்குமேல் உயர்த்தினார். உடனே வானிலிருந்து கடவுள் தனது தூதர் வழியாக, “ஆபிரகாமே, ஆபிரகாமே!” என்று அழைத்தார். அதற்கு ஆபிரகாம், “சொல்லுங்கள், எஜமானே!” என்றார். அப்போது அவர், “ உன் மகனைக் கொன்றுவிடாதே, அவனை ஒன்றும் செய்துவிடாதே. நீ என்மீது பயம் உள்ளவன் என்று இப்போது நான் தெரிந்துகொண்டேன். ஏனென்றால், எனக்காக உன்னுடைய ஒரே மகனைக் கொடுப்பதற்குக்கூட நீ தயங்கவில்லை” என்றார்.

அப்போது, சற்றுத் தூரத்தில் ஒரு செம்மறிக் கிடாய் இருப்பதை ஆபிரகாம் பார்த்தார். அதனுடைய கொம்புகள் ஒரு புதரில் சிக்கியிருந்தன. ஆபிரகாம் அங்கே போய் அந்தச் செம்மறி ஆட்டுக் கடாவைப் பிடித்துக்கொண்டு வந்து, தன் மகனுக்குப் பதிலாக அதைத் தகன பலியாகச் செலுத்தினார். பின்னர் ஆபிரகாம் அந்த இடத்துக்கு ‘யகோவாயீரே’ என்று பெயர் சூட்டினார்.

கடவுளின் உடன்படிக்கை

ஆபிரகாமுக்கு முன்பு நோவா உள்ளிட்ட பல சிறந்த விசுவாசிகள் மனித குலத்துக்கு எடுத்துக்காட்டாக இருந்தார்கள். ஆனால், பூமியின் சகல மக்களையும் ஆசிர்வதிப்பதற்கான உடன்படிக்கையைக் கடவுள், ஆபிரகாமுடன்தான் செய்துகொண்டார். இதைத் தொடக்க நூலின் 18-வது அத்தியாயம் 16 முதல் 18 வரையிலான வசனங்களில் காண முடியும்.

கடவுளின் தூதர் வானிலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு, “நீ உன்னுடைய ஒரே மகனை எனக்குக் கொடுக்கத் தயங்காததால், நான் உன்னை நிச்சயம் ஆசீர்வதிப்பேன். உன்னுடைய சந்ததியை வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் பெருகப் பண்ணுவேன். உன்னுடைய சந்ததி, எதிரிகளுடைய நகரங்களைக் கைப்பற்றும். நீ என் பேச்சைக் கேட்டதால், உன்னுடைய சந்ததியின் மூலம் பூமியிலுள்ள எல்லா தேசத்தாரும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள்” என்று சொன்னார்.

அது மட்டுமல்ல, “நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்.” என்று கடவுள் ஆபிரகாம் வழியாக மனித இனத்தை இன்றுவரையிலும் ஆசீர்வதிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x