

தட்சிண காசி என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் மிகவும் பழமையான நகராகும். கோயில் நகரமான இது சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி, ஜைனக்காஞ்சி என்று மூன்று பகுதிகளாகப் பிரித்து அழைக்கப்படுகிறது. இப்பெயர்களின் மூலம் மூன்று சமயங்கள் இம்மண்ணில் செழிப்பாக இருந்தது தெரியவருகிறது.
ஜைன காஞ்சி என்பது காஞ்சிபுரத்தில் இருக்கும் திருப்பருத்திக்குன்றம் பகுதியாகும். இங்கு கடைசி ஜைன தீர்த்தங்கரரான மகாவீரருக்கும், எட்டாவது தீர்த்தங்கரரான சந்திரநாதருக்கும் ஆலயங்கள் உள்ளன. இங்கு சமயம், கல்வி, சமுதாயம் சார்ந்து பெரும் தொண்டுகள் நடந்தன. அக்கால வித்யாத்தலமாக அது விளங்கியுள்ளது.
தமிழகத்தில் கிடைத்த முதல் செப்பேடான பள்ளன் கோயில் செப்பேடு திருப்பருத்திக்குன்ற மகாவீரர் கோயில் பற்றியது. இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் கருங்கற்களால் கட்டப் பட்டது. அறப்பாவலர் அர்க்ககீர்த்தி, “தொன்மைசேர் பருத்திக் குன்றிலுறைகின்ற திரிலோகநாதனே” எனத் தன் கவியில் குறிப்பிடுகிறார். இக்கோயில் தமிழரின் கட்டிட, சிற்ப, ஓவியக் கலைகளுக்கு எடுத்துக்காட்டாகும். இங்கு கல்வெட்டுகள் உள்ளன.
மகாவீரர், புஷ்பதந்தர், தருமதேவி ஆகியோரின் கருவறைப் பகுதி, திரைலோக்கியநாதர் கோயில் ஆகும். மற்றப் பகுதி திரிகூட ஆலயம். இங்கு பத்மபிரபர், வாசுபூஜ்யர், பார்சுவநாதர், ரிஷபதேவர், பிரம்மதேவர் ஆகியவரின் கருவறைகள் உள்ளன. சங்கீத மண்டபம், தானியக்கிடங்கு, முனிவாசம் ஆகியவையுள்ளன. இங்குள்ள தருமதேவி அம்மன் மிகச் சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது. சோழர், பல்லவர், விஜயநகர மன்னர்கள் ஆதரித்து வழிபட்டுள்ளனர்.
மண்டபங்களின் உட்கூரைகளில் மிக அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. பகவான் ரிஷபதேவர், மகாவீரர், நேமிநாதர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் மிகக் கலைநயத்தோடு வண்ண ஓவியங்களாக உள்ளன. அதுபோல் கிருஷ்ணரின் பிறப்பு, வளர்ப்பு, அவரின் வீர தீர லீலைகளும், தருமதேவிஅம்மனின் வாழ்க்கை வரலாறும் கண் கவரும்படி மிக உன்னத ஓவியங்களாகப் பல வண்ணங்களில் மிளிர்கிறன.
இக்கோயிலில் உள்ள குராமரம் மிகப் பிரசித்தமானது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. இம்மரம் தருமத்தின் உறைவிடமாகவும் அரச செங்கோலைக் காக்க கூடியதென்றும் நம்பப்படுகிறது. இம்மரத்தைப் பற்றிய பாடலில்
“தன்னளவிற் குன்றா துயராது தண்காஞ்சி
முன்னுளது மும்முனிவர் மூழ்கியது_ மன்னவன்தன்
செங்கோல் நலங்காட்டும் தென்பருத்திக் குன்றமர்ந்த
கொங்கார் தருமக் குரா”எனப்படுகிறது. குராமரத்தின் கீழ் ஆசாரியர்களின் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் மல்லிசேன வாமன ஆசாரியர் என்பவரின் பாதமும் ஒன்று. இவர் மேருமந்திர புராணம், நீலகேசி என்ற நூலுக்கு சமய திவாகரம் உரை ஆகிய நூல்களை இயற்றித் தமிழுக்கு அணி சேர்த்தார்.
மேருமந்திர புராணத்தையும் உலகிலேயே உள்ள ஒரே ஒரு நீலகேசிச் சுவடியையும் 90 ஆண்டுகளுக்கு முன் பேராசிரிய அ.சக்கரவர்த்தி நைனார் என்பவர் முதன்முதலாகச் சுவடிகளிலிருந்து பதிப்பித்தார்.
திரைலோக்கியநாதர் கோயிலுக்கு அடுத்தது பகவான் சந்திரப்பிரபர் ஆலயம் கி.பி எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கருவறையில் சந்திரப்பிரபரின் சுதை வடிவம் உள்ளது. டி.என். இராமச்சந்திரன் என்பவர் தன் ஆங்கில நூலில் இக்கோயில்களைப்பற்றி விரிவாக எழுதியுள்ளார்.
ஒரு காலத்தில் ஜைன காஞ்சியாக, சமண மையமாகத் திகழ்ந்த இவ்விடத்தில் சமண மடம் ஒன்றும் இருந்தது. தற்போது அது செஞ்சி அருகே உள்ள மேல்சித்தாமூருக்கு இடம்பெயர்ந்துவிட்டது.