

குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கான பாரம்பரிய பெருவழிப் பாதை வரும் 17-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்காக வனப் பாதையை தூய்மை செய்யும் பணி வழிபாடுகளுடன் இன்று தொடங்கியது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் நவம்பர் 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு நவம்பர் 17-ம் தேதி முதல் மண்டல பூஜைக்கான வழிபாடுகள் தொடங்க உள்ளன. ஆன்லைன் மூலமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கின்றனர். இதற்காக கடந்த நவ.1-ம் தேதி முதல் முன்பதிவு தொடங்கின. மாதாந்திர வழிபாட்டுக்கு வனப் பாதைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
தற்போது மண்டல காலம் தொடங்க உள்ளதால் பாரம்பரிய பெருவழிப் பாதையான எருமேலி - கல்லக்கட்டி, வண்டிப் பெரியாறு - சத்திரம் உள்ளிட்ட வனப்பகுதி வழியே செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக தரிசன முன்பதிவின் போதே பக்தர்கள் தாங்கள் செல்ல விரும்பும் பாதையையும் தேர்வு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த முன்பதிவின் அடிப்படியிலே பக்தர்கள் சம்பந்தப்பட்ட வனப்பாதையில் செல்ல முடியும்.
இந்த வனப்பாதைகள் நவ.17-ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வர வனத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக கரிமலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சீரமைப்புப் பணிகள் இன்று (நவ.6) தொடங்கின. முதல் நாளான நவ.17-ம் தேதி காலை நுழைவுப் பகுதியில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்கள் இதன் வழியே அனுமதிக்கப்படுவர் என்று வனத்துறையினர் கூறினர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “கடந்த ஜனவரியில் மகர பூஜையின்போது வனப்பாதை திறக்கப்பட்டது. சுமார் 10 மாதமாக இங்கு ஆள் நடமாட்டம் எதுவும் இல்லை. இதனால் புதர்மண்டி, பாதைகள் சிதிலமடைந்து கிடக்கிறது. ஆகவே சுத்தப்படுத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளது” என்றனர்.
இந்நிலையில், தரிசனத்துக்கும், பெருவழிப் பாதையில் செல்வதற்கும் ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். நிர்ணயித்த அளவு முடிந்ததும் பின்பு யாரும் அந்த நாளில் முன்பதிவு செய்ய முடியாது. ஆகவே தங்கள் பயணத் திட்டத்துக்கு ஏற்ப நாட்களை விரைவாக தேர்வு செய்து கொள்ளும்படி திருவிதாங்கூர் தேவசம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.