

ஸ்ரீரங்கம்: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெற உள்ள வைகுந்த ஏகாதசி பெருவிழாவையொட்டி இன்று ஆயிரங்கால் மண்டபம் அருகே முகூர்த்தகால் நடப்பட்டது.
பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதும் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் வைகுந்த ஏகாதசி பெருவிழா மிகவும் விசேஷமாகவும், வெகு விமரிசையாகவும் கொண்டாடப்படும். விழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்வர்.
நிகழாண்டு வைகுந்த ஏகாதசி பெருவிழா டிச.19-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. இதையொட்டி, முகூர்த்தக்கால் நடும் வைபவம் கோயல் ஆயிரங்கால் மண்டபம் அருகில் ஐயப்பசி தசமி திதி அவிட்டம் நட்சத்திரம் தனுர் லக்னத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, கோயில் பட்டர்கள் வேதங்கள் ஓத, மேளதாளங்கள் முழங்க, நாதஸ்வரங்கள் ஒலிக்க கோயில் யானைகள் ஆண்டாள், லட்சுமி ஆயிரங்கால் மண்டபத்துக்கு அருகில் நின்றபடி மரியாதை செலுத்தின.
பந்தல் காலில் புனிதநீர் ஊற்றி, சந்தனம், மாவிலை மற்றும் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பந்தல்காலை கோயில் பணியாளர்கள் நட்டனர். தொடர்ந்து, ஆயிரங்கால் மண்டபம் அருகே கூடுதல் பந்தல்கால்கள் நடப்பட்டு திருக்கொட்டகை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார், கோயில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், கண்காணிப்பாளர்கள் வெங்கடேசன், கோயில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
டிச.30-ல் சொர்க்கவாசல் திறப்பு: வைகுண்ட ஏகாதசி பெருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் டிச.19-ம் தேதி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. டிச.20-ம் தேதி காலை 7 மணிக்கு பகல்பத்து (திருமொழித் திருநாள்) தொடங்குகிறது. டிச.29-ம் தேதி மோகினி அலங்காரத்தில் (நாச்சியார் திருக்கோலம்) நம்பெருமாள் காலை 6 மணிக்கு எழுந்தருள்கிறார்.
டிச.30-ம் தேதி ஏகாதசி தினமான அதிகாலை 5.45 மணிக்கு சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு நடைபெறுகிறது. அன்று முதல் ராப்பத்து (திருவாய்மொழித் திருநாள்) தொடங்கி நடைபெறும். 5.1.2026 அன்று திருக்கைத்தலை சேவை மாலை 6 மணிக்கும், 6.1.2026 அன்று மாலை 5 மணிக்கு திருமங்கை மன்னன் வேடுபறியும், 8.1.2026 அன்று காலை 9 மணிக்கு தீர்த்தவாரியும், 9.1.2026 அன்று காலை 6 மணிக்கு நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.