

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவில் இன்று (அக்.27) மாலை கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் பிரசித்தி பெற்ற கந்தசஷ்டி திருவிழா கடந்த 22-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருநாளான இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளியதும் பூஜைகள் தொடங்கின.
காலை 9 மணிக்கு பூர்ணாஹுதி தீபாராதனை, சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பாடாகி சண்முகவிலாசத்திலும், பிற்பகல் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திலும் எழுந்தருளினார். அங்கு, சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
மாலை 4.30 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் போர்க்கோலம் பூண்டு கடற்கரைக்கு எழுந்தருளினார். முன்னதாக, சிவன் கோயிலி்ல் இருந்து சூரபத்மன் புறப்பட்டு கடற்கரைக்கு பரிவாரங்களுடன் வந்து சேர்ந்தார். முதலில், கஜ முகத்துடன் போரிட்ட சூரபத்மனை மாலை 4.56 மணிக்கு ஜெயந்திநாதர் தனது வேலால் வதம் செய்தார். இரண்டாவதாக சிங்க முகத்துடன் வந்த சூரனை 5.16 மணிக்கும், மூன்றாவதாக சுயரூபத்துடன் போரிட்ட சூரபத்மனை 5.32 மணிக்கும் சுவாமி வதம் செய்தார். பின்னர், சேவலாக உருக்கொண்ட சூரனை, ஜெயந்திநாதர் ஆட்கொண்டார்.
அப்போது, கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என விண்ணதிர கோஷம் முழங்கி தரிசனம் செய்தனர். பின்னர், கடலில் புனித நீராடி விரதத்தை நிறைவு செய்தனர். சந்தோஷ மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. பின்னர், பூஞ்சப்பரத்தில் சுவாமி கிரிபிரகாரம் உலா வந்து கோயில் சேர்ந்தார். இரவில், 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கு சாயா அபிஷேகம் நடைபெற்று, பக்தர்களுக்கு சஷ்டி பூஜை தகடுகள் கட்டப்பட்டன.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, கடம்பூர் ராஜு எம்எல்ஏ, உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், செந்தில்குமார், புகழேந்தி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, கோயில் தக்கார் ரா.அருள்முருகன், இணை ஆணையர் க.ராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏடிஜிபி (சைபர் கிரைம்) சந்தீப் மிட்டல், தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா, திருநெல்வேலி சரக டிஜஜி (பொ) சந்தோஷ் ஹாதிமணி, தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆகியோர் தலைமையில் 4,300 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.