

குமுளி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இருமுடி கட்டி சபரிமலையில் 18 படிகளேறி ஐயப்பனை இன்று தரிசனம் செய்தார். அவருக்கு தேவசம் போர்டு சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. சபரிமலையில் தரிசனம் செய்த முதல் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆவார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் செய்யப்பட்டிருந்தது. இதற்காக நேற்று (அக்.21) மாலையில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த திரவுபதி முர்முவுக்கு விமான நிலையத்தில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்பு ஆளுநர் மாளிகையில் தங்கிய திரவுபதி முர்மு, இன்று காலை 9.35 மணி அளவில் திருவனந்தபுரத்தில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சபரிமலை புறப்பட்டு சென்றார். நிலக்கல்லில் இறங்கிய திரவுபதி முர்மு, அங்கிருந்து கார் மூலம் பம்பை சென்றடைந்தார். பம்பை கணபதி கோயிலில் இரு முடி கட்டிய பின் பம்பையில் இருந்து ஜீப் மூலம் சந்நிதானம் சென்றார்.
அங்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, திரவுபதி முர்முவும் அவரது மெய்க்காவலர்களும் 18-ம் படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தினர். பின்பு சந்தன பிரசாதத்தை திரவுபதி முர்முவுக்கு வழங்கினார். தொடர்ந்து மாளிகைப் புரத்தம்மன் கோயிலை வழிபட்ட திரவுபதி முர்மு, ஜீப் மூலம் பம்பை வந்து நிலக்கல்லில் இருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் கிளம்பிச் சென்றார்.
குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு இன்று பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அவர் தரிசனம் முடித்துச் சென்ற பிறகே பக்தர்கள் சபரிமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். சபரிமலைக்கு வந்து, ஐயப்பனை தரிசனம் செய்த முதல் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு என்பது குறிப்பிடத்தக்கது.
மாதாந்திர வழிபாடுகள் முடிவடைந்ததால் இன்று இரவு நடை சாத்தப்பட்டு மண்டல பூஜை வழிபாட்டுக்காக நவ.16-ம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது என்று தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.