நவக்கிரக தோஷம் போக்கும் குடந்தை ஸ்ரீபகவத் விநாயகர்: ஞாயிறு தரிசனம்

நவக்கிரக தோஷம் போக்கும் குடந்தை ஸ்ரீபகவத் விநாயகர்: ஞாயிறு தரிசனம்
Updated on
1 min read

மூலவர்: ஸ்ரீபகவத் படித்துறை விநாயகர்

தல வரலாறு: வேதாரண்யத்தில் ஸ்ரீபகவர் மகரிஷி தன் சீடருடன் வசித்து வந்தார். முனிவரின் தாயார் இறக்கும் தருவாயில் அவரிடம், “நான் இறந்ததும் என் அஸ்தியை கலசத்தில் சேகரித்து புனிதத் தலங்களுக்கு எடுத்துச் செல். எங்கு என்னுடைய அஸ்தி மலர்களாக மாறுகிறதோ, அங்கு ஓடும் புனிதநதியில் கரைத்து விடு” என்று கூறிவிட்டு உயிர் துறந்தார்.

இதனால் ஸ்ரீ பகவர் தன் சீடருடன் தாயாரின் அஸ்தியை எடுத்துக்கொண்டு தீர்த்த யாத்திரை சென்றார். அவர் கும்பகோணம் (குடந்தை) வந்து காவிரி நதியில் நீராடும்போது, சீடனுக்கு பசி காரணமாக ஏதாவது பலகாரம் இருக்கும் என்று அஸ்திக் கலசத்தை திறந்து பார்க்க அதில் மலர்கள் இருக்கக் கண்டு ஏமாற்றம் அடைந்து முன்பு இருந்தது போல மூடிவைத்து விடுகிறார். இச்செயல் குருவுக்கு தெரியாது. காசியில்தான் அஸ்தி மலருமென்று எண்ணிய குருநாதர் காசியிலும் மலராதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அப்போது குடந்தையில் நடந்ததை சீடர் குருவிடம் கூற, அவர் குடந்தையை அடைந்து காவிரியில் நீராடினார். அஸ்தி மலர்களாக மாறியிருப்பது கண்டு மகிழ்ச்சியுற்று அஸ்தியை கரைக்கிறார். கும்பகோணம் காசியை விடவும் புனிதமானது என்பதை உணர்ந்த குரு, தன் சீடருடன் குடந்தையில் தங்கி வணங்கிய இந்த கணபதிக்கு, ‘ஸ்ரீ பகவத் விநாயகர்’ என்ற பெயர் வந்தது.

சிறப்பு அம்சம்: விநாயகரின் நெற்றியில் சூரியன், நாபிக் கமலத்தில் சந்திரன், வலது தொடையில் செவ்வாய், வலது கீழ்க்கையில் புதன், சிரசில் வியாழன், இடது கீழ்க்கரத்தில் சுக்கிரன், வலது மேல் கையில் சனி, இடது மேல் கையில் ராகு, இடது தொடையில் கேது என நவக்கிரகங்கள் குடி கொண்டுள்ளன.

அமைவிடம்: குடந்தை பேருந்து நிலையத்தில் இருந்து 1 கிமீ தொலைவில், மடத்துத் தெருவில் உள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6-12, மாலை 4-8 மணி வரை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in