

தமிழகத்தில், பல இடங்களில் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவனுக்குக் கோயில்கள் உள்ளன. சென்னையில் நங்கநல்லூர், மாம்பலம், வில்லிவாக்கம் முதலிய இடங்களில் ஹயக்ரீவர் எழுந்தருளியுள்ளார். அவற்றில் வில்லிவாக்கத்தில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோயிலுக்குத் தனிச் சிறப்பு உண்டு. இது 1969-ல் அரசாணிபாலை நல்லூர் ஸ்ரீநிவாச ராகவாச்சார்யர் சுவாமியால் (ஸ்ரீ சேவா சுவாமி) கட்டப்பட்டது.
தேசிகர் மீது ஈடுபாடு
சேவா சுவாமி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர் அவர். 1968-ல் சுவாமி தேசிகனின் ஏழாம் நூற்றாண்டு விழாவைச் செவ்வனே நடத்தி ஸ்ரீ தேசிகனின் விக்ரஹத்தை நாடெங்கும் எடுத்துச் சென்றார். அந்த நிகழ்வின் அங்கமாகச் சிறப்பு மலர்களை வெளியிட்டு, ஸ்ரீதேசிகனின் புகழையும் அவர் அருளச் செய்தார். அவரின் புகழை மக்களிடையே பரப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக வில்லிவாக்கத்தில், உருப்பட்டூர் ராஜகோபால அய்யங்கார் இதற்காக இடம் அளித்தும் வைஷ்ணவப் பெரியோர்களின் உதவியால் ஒரு மண்டபத்தை நிறுவினார்.
சுவாமி தேசிகன் திருப்பதி வேங்கடேசப் பெருமாள் மணியின் அவதாரமாகக் கருதப்படுவதால் இந்த மண்டபத்துக்கு ‘மணி மண்டபம்’ எனப் பெயர் சூட்டப்பட்டது. பின்னர் குறுகிய காலத்துக்குள்ளாகவே லக்ஷ்மி ஹயக்ரீவன், ஆண்டாள், நம்மாழ்வார், பகவத் ராமானுஜர், வேதாந்த தேசிகனின் விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த மணி மண்டபத்தை ‘ஞானபஞ்சாயதநம்’ என்று உ.வே. சேவா சுவாமி அழைப்பார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு தாயார் சன்னிதி தனியாக அமைக்கப்பட்டு ஆனந்த லட்சுமி தாயார் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதிஷ்டை செய்யப்பட்ட தினத்திலிருந்து இன்றுவரை ஒரு நாள்கூடத் தவறாமல் எம்பெருமானுக்கும் ஆச்சார்யர்களுக்கும் தினமும் ஆராதனை உள்ளிட்ட பணிகள் செவ்வனே நடந்துவருகின்றன. தேசிக சம்பிரதாய ஆச்சார்யர்களின் திருநட்சத்திரங்களும் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இந்த மண்டபத்தில் ஏராளமான உபன்யாசங்களையும் கதாகாலட்சபங்களையும் சேவா சுவாமி நடத்தியுள்ளார். இவை தவிர தோத்திரப் பாட வகுப்புகளும் சங்கீதப் பாட வகுப்புகளும் மணி மண்டபத்தில் நடந்துள்ளன. இம்மணி மண்டபத்துக்கு மடாதிபதிகளும் ஆச்சார்யர்களும் வருகை புரிந்துள்ளனர். சேவா சுவாமி காட்டிய வழியில் மணிமண்டபத்தில் ஆழ்வார் ஆச்சார்யர்களின் திருநட்சத்திரங்களும் பல சம்பிரதாய நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
750-வது திருநட்சத்திர மஹோத்ஸவம்
ஸ்வாமி தேசிகனின் 750-வது திருநட்சத்திர மஹோத்ஸவத்தைக் கொண்டாடும் விதமாக 25-8-2018 (ஆவணி திருவோணம்) முதல் 21-09-2018 (புரட்டாசி திருவோணம்) வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. அனைவரும் இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பரிமுகன், தேசிகன் அனுக்கிரஹத்தைப் பெறலாம்.
தொடர்புக்கு: 044-26180481, 9841046264