Last Updated : 28 Aug, 2014 12:17 PM

 

Published : 28 Aug 2014 12:17 PM
Last Updated : 28 Aug 2014 12:17 PM

வளமெல்லாம் அருளும் நெய் நந்தீஸ்வரர் - செப்டம்பர் 6: சனிப் பிரதோஷம்

அழகிய அந்த கிராமத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்னரெல்லாம் சிவன் கோவில் கிடையாது. விநாயகர், முருகன் கோவில்கள் இருந்தாலும் சிவன் கோவில் இல்லை என்பதை ஒரு குறையாக அறியப்படாத காலம். அப்போது சுமார் நூறு குடும்பங்கள்தான் அவ்வூரில் இருந்தன.

இந்நிலையில் இம்மக்கள் வெளியூர்களில் சிவன் கோவில்களைப் பார்த்த பின்னர், தங்களின் இந்த ஊரான வேந்தன்பட்டியிலும், சிவன் கோவில் வேண்டும் என விரும்பியதை அடுத்து இங்கு சிவன் கோவில் கட்டி வைத்தனர். புதுக்கோட்டையில் உள்ள இக்கிராமத்தை அடுத்த கொடும்பாளூர் என்ற ஊரில் மிக பெரிய நந்தி சிலாரூபங்கள் செய்வது வழக்கம்.

இந்நிலையில் வேந்தன்பட்டி சிவனுக்கு எதிரே வைப்பதற்காக நந்தியினைப் பெற வேந்தன்பட்டி கிராம மக்கள் முடிவு செய்தனர். அப்போது கொடும்பாளூரில் ஒரே விதமான கல்லில் செதுக்கப்பட்ட ஐந்து நந்திகளில் ஒன்றைப் பெற்று வந்தார்களாம்.

கோவில் கட்டும் பணி பாதி மட்டுமே நிறைவேறி இருந்ததால், அந்நந்தியினை ஊர் குளத்தில் வைத்துள்ளனர். பல ஆண்டுகளுக்கு நீரில் மூழ்கியே ஜல வாசம் செய்தார் நந்தி. பூஜைகளும், போற்றுதல்களும் இல்லாமலேயே ஆண்டுகள் கழிந்தன.

இந்த நிலையில் ஊரில் கொள்ளை நோய் கிளம்பியது. இக்குளமும் வறட்சியால் தண்ணீர் வற்றியது. இக்குளத்தில் வளர்ந்துள்ள புல், பூண்டுகளை மேய்ந்த மாடுகளுக்கு மடி கட்டிக் கொண்டு பால் சுரக்க இயலாத நிலையும் ஏற்பட்டதாம்.

இக்கோவிலில் இருந்த சாமியாடி ஒருவர் மூலம், நந்திக்கு பசு நெய் பூசி, பூஜை செய்தால் ஊரும், மக்களும் செழிப்புறுவர் என்று கூறினாராம். மக்களும் அர்ச்சகர் மூலம் நந்தியை பிரதிஷ்டை செய்த பின், முதன்முறையாக நெய் பூச முற்பட, நெய்யாக இருப்பதால் ஈ, எறும்பு சாரி சாரியாக வந்தால் என்ன செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிசயமாக ஒரு வாரம் கழித்துக் கூட ஈ, எறும்புகள் வரவில்லை. இன்றும், இந்த அற்புதம் நிகழ்கிறது.

சுத்தமான பசு நெய் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. ஏராளமான இந்த நெய்யை, நெய் கிணற்றில் ஊற்றினாலும், அக்கிணற்றைச் சுற்றி ஈ, எறும்புகள் வருவதில்லை. மேலும் நெய் நந்தீஸ்வரரின் திருமேனியை ஈ, எறும்புகள் மட்டுமல்லாமல் பிற பூச்சிகளும் அண்டுவதில்லை என்பது அதிசயம். அப்போது நூறு குடும்பங்கள் மட்டுமே இருந்த இவ்வூரின் வளம் காரணமாக தற்போது, மூவாயிரம் குடும்பங்கள் உள்ளன என்றார் இவ்வூரைச் சேர்ந்த நாகப்பா செந்தில்.

நகரத்தார் உருவாக்கிய இந்த நெய் நந்தீஸ்வரர் கோவிலுக்கு இதுவரை எட்டு முறை கும்பாபிஷேகம் நிகழ்ந்துள்ளதாம். மீனாட்சி உடனுறை சொக்கலிங்கேஸ்வரர் பிரதான தெய்வமாக உள்ள இத்திருக்கோவிலில் சனி பிரதோஷம் மிகப் பிரபலம்.

இவ்வூருக்குள் நுழையும்போதே, நெய் மணம் காற்றில் கலந்து வந்து பக்தர்களை வரவேற்கிறது. கவியரசர் கண்ணதாசனால் பாடல் பெற்றது இத்திருத்தலம் என்பது குறிப்பிடத்தக்கது.

வித்தியாசமாக மக்கள் உருவாக்கிய இக்கோவிலும், இறைவன் இசைந்து அருளும் அழகும் ஒரு புதுமையான தல புராணமாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x