Last Updated : 12 Jul, 2018 10:20 AM

 

Published : 12 Jul 2018 10:20 AM
Last Updated : 12 Jul 2018 10:20 AM

விவிலிய மாந்தர்கள் 01: பூமிப்பந்தின் முதல் மானுடன்

 

று நாட்கள் செலவிட்டுப் பூமியைப் படைத்த கடவுள், ஏழாம் நாள் ஓய்வெடுத்தார். அந்த ஓய்வுநாளைக் கிறிஸ்தவம், இஸ்லாம், யூதம் உள்ளிட்ட ஆபிரகாமிய மதங்கள் புனித நாளாகக் கடைப்பிடிக்கின்றன. அந்தப் புனித நாளுக்குப் பின் பூமியின் முதல் மனிதனாக மட்டுமல்ல, முதல் புனிதனாகவும் கடவுளால் படைக்கப்பட்டவர் ஆதாம்.

வானத்தையும் பூமியையும் கடவுள் படைத்தபோது, ‘பூமி ஒழுங்கில்லாமல் வெறுமையாக இருந்தது’ எனக் கூறுகிறது விவிலியத்தின் தொடக்க நூல். அந்த வெறுமையைப் போக்கவே கடவுள் இருளையும் வெளிச்சத்தையும் உருவாக்கி, பூமி முழுவதும் சூழ்ந்திருந்த தண்ணீரை ஒரே பக்கமாக ஒதுக்கி அதைக் கடலாக நிலைநிறுத்தினார். தரையை உண்டாக்கி அதற்கு நிலம் என்று பெயரிட்டார். நிலமாக மாறிய உலர்ந்த தரையில் கடவுள் வரைந்த உயிருள்ள ஓவியம் என, மரம், செடி, கொடிகள், புல், பூண்டு உள்ளிட்ட பசுமைக் கூட்டத்தைக் கூறலாம்.

பூமியை அழகாக்கிய அம்சங்கள்

“நிலத்தில் புற்களும் செடிகளும் மரங்களும் அந்தந்த இனத்தின்படியே முளைக்கட்டும். செடிகள் விதைகளைத் தரட்டும், மரங்கள் விதைகளுள்ள பழங்களைக் கொடுக்கட்டும்” என்று கடவுள் சொன்னார். அதன்படியே நிலத்தில் புற்களும் செடிகளும் மரங்களும் அந்தந்த இனத்தின்படியே முளைக்கத் தொடங்கின. செடிகள் விதைகளைத் தந்தன, மரங்கள் விதைகளுள்ள பழங்களைக் கொடுத்தன. கடவுள் அவற்றைப் பார்த்தபோது அவை நன்றாக இருந்தன என்று விவிலியம் விவரிக்கிறது.

படைப்பின் அடுத்தகட்ட அற்புதமாகக் கடல் உயிரினங்களையும் நிலத்தில் பறவைகளையும் விலங்குகளையும் அவர் சிருஷ்டித்தார். பூமியை அழகாக்கிய நீர், வெளிச்சம், பசுமை, உயிர்கள் ஆகியவற்றால் பூமிக்கு ஒரு தனி அழகு வந்திருப்பதைக் கடவுள் கண்டார். ஆனால், கடவுள் இதுபோதும் என்று இருந்துவிடவில்லை. இத்தனை அழகும் கம்பீரமுமாக படைத்துவிட்டபின் பூமியை மேலும் அழகுள்ளதாக அவர் ஆக்க விரும்பியதன் விளைவே, சிந்திக்கும் திறன்கொண்ட முதல் ஜீவாத்மாவாகிய ஆதாம் எனும் ஆதிமகனின் சிருஷ்டிப்பு!

கடவுளின் சாயல்

கடவுள் உருவத்தில் எப்படி இருப்பார் என்பதற்குப் பெரும்பாலான மதங்கள் ஏற்றுக்கொண்ட அடிப்படைத் தத்துவமாக இருப்பது மனித சாயல். ஆம்! விவிலியமும் அதையே நிறுவுகிறது. தொடக்க நூலின் தொடக்க அதிகாரத்தில், வசனம் 29-ல், ‘கடவுள், “மனிதனை நம்முடைய சாயலில் நம்மைப் போலவே உண்டாக்கலாம். கடலில் வாழும் மீன்களும், வானத்தில் பறக்கும் பறவைகளும், வீட்டு விலங்குகளும், ஊர்ந்து செல்லும் பிராணிகளும், முழு பூமியும் அவனுடைய அதிகாரத்தின்கீழ் இருக்கட்டும்”என்று சொன்னார் எனக் கூறுகிறது. தொடக்க நூலின் இரண்டாம் அதிகாரம், 7-வது வசனம் ‘கடவுளாகிய பரலோகத் தந்தை, நிலத்திலிருந்து மண்ணை எடுத்து, மனிதனை உருவாக்கத் தொடங்கினார்; அவனுடைய மூக்கில் உயிர்மூச்சை ஊதினார். அப்போது அவன் உயிருள்ளவன் ஆனான்’ எனக் கூறுகிறது.

தான் படைத்த மனிதன் தனது சாயலில் மட்டுமே இருக்க வேண்டும் என்று கடவுள் உறுதியாக இருந்தது மனித சமூகத்துக்கு எத்தனை பெரிய ஆசீர்வாதம்! அது மட்டுமல்ல; பூமியை வழிநடத்தும் தலைவனாகவும் அவனுக்குக் கடவுள் அதிகாரத்தைக் கொடுக்கிறார். அந்த அதிகாரம் மண்ணிலிருந்து கடவுளால் உருவாக்கப்பட்டதால் அவனுக்கு வழங்கப்பட்டது என்கிறார்கள் விவிலிய ஆராய்ச்சியாளர்கள். மேலும் விலியத்தின் மூல மொழிகளுள் ஒன்றாகிய எபிரேயத்தில் ‘ஏதாம்’ (a.dham) என்று வழங்கப்படும் சொல்லுக்கு ‘மண்ணுக்குரிய மனிதன்’ என்று பொருள் கொள்ளப்படுகிறது.

ஏதேன் எனும் பரிசு

ஆதாமைப் படைத்த பிறகு பூமியின் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்து, அவனை அங்கே குடிவைத்தார். அதைப் பண்படுத்தவும் பராமரிக்கவும் சொன்னார். அதோடு, மனிதனுக்கு ஒரு முக்கியமான கட்டளையையும் கொடுத்தார்: “இந்தத் தோட்டத்தில் இருக்கிற எல்லா மரங்களின் பழங்களையும் நீ திருப்தியாக உண்ணலாம். ஆனால், ‘நன்மை தீமை’அறிவதற்கான மரத்தின் பழத்தை மட்டும் நீ சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால், அதே நாளில் நீ இறந்துபோவாய்.” என்று எச்சரித்தார்.

அவரது எச்சரிக்கையை மனத்தில் நிறுத்தியிருந்த ஆதாமுக்கு, ஏதேன் தோட்டம் பூமியின் சொர்க்கமாக இருந்தது.

அங்கே ஆதாமே தலைவன். ஏனெனில், ஏதேன் தோட்டத்தையும் அங்குள்ள அனைத்து உயிர்களையும் அவன் கவனத்துடன் கையாளவும் அவற்றை நேசிக்கவும் கூடிய பண்பை அவன் வளர்த்துக்கொள்கிறானா என்பதைக் காண விரும்பினார் கடவுள். இதற்காகத் தாம் படைத்த எல்லாக் காட்டு விலங்குகள், பறவைகள் உயிரினங்கள் ஆகிவற்றுக்கு ஆதாம் என்ன பெயர் வைப்பான் என்று பார்ப்பதற்காக, அவற்றை அவனிடம் கடவுள் கொண்டுவந்தார். ஒவ்வோர் உயிரினத்துக்கும் முதல் மனிதனாகிய ஆதாம் என்ன பெயர் வைத்தானோ அவையே அவற்றின் பெயர்களாக ஆயின என்று விளக்குகிறது விவிலியம்.

ஏவாள் எனும் தோழி

கடவுள் எதிர்பார்த்தபடியே அவன் கடவுளின் பிள்ளையாகவும் பூமியின் தலைவனாகவும் இருந்தான். ஆனால், அவனுக்குப் பொருத்தமான ஒரு துணை இல்லை என்பதைக் கடவுள் உணர்ந்தார். அவனுக்கு ஆழ்ந்த தூக்கத்தை வரவழைத்து அவன் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில், அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்த கடவுள், அதிலிருந்து ஒரு பெண்ணை உருவாக்கி, அவளை ஆதாமிடம் கொண்டுவந்தார். அவளே ஏவாள். கடவுள் குறிப்பிட்டபடியே ‘அவர்கள் ஒரே உடலாக, கணவனும் மனைவியுமாக’ இருந்தார்கள். நிர்வாணத்தை உணர முடியாதவர்களாக அவர்கள் இருந்தார்கள். அதனால் அவர்கள் வெட்கப்படவில்லை. ஏவாள் தனக்குத் துணையாக விளங்கியதில் ஆதாம் மகிழ்ந்திருந்தான். தன் தந்தையாகிய கடவுளால் தனக்கு அளிக்கப்பட்டவளை அவன் நம்பினான். ஆனால், சாத்தானால் ஏவாள் ஏமாற்றப்பட்டாள். ஆதாமும் சாத்தானின் வலைக்குள் சிக்கிக்கொள்ள ஏவாள் காரணமாகிப்போனாள். எதை உண்ணக் கூடாது என்று கடவுள் எச்சரித்திருந்தாரோ அந்த மரத்தின் கனியை உண்ட ஏவாள், அதில் பாதியை ஆதாமையும் உண்ணும்படி செய்தாள். பூமியில் முதல் பாவம், ‘கீழ்ப்படிதல்’ எனும் கடவுள் தந்த ஞானத்தைப் பொருட்படுத்தாமல் இருவராலும் மீறப்பட்டதால் நிகழ்ந்துபோனது. புனிதமான ஏதேனில் கலகக் கறை படிந்தது. ஆதாமையும் அவனுடைய மனைவி ஏவாளையும் தோட்டத்தை விட்டு கடவுள் வெளியேற்றினார். ஆதாமும் ஏவாளும் இழந்தது ஏதேன் எனும் அற்புதத்தை மட்டுமல்ல, கடவுள் தந்திருந்த ‘சாகா வர’த்தையும்தான்.

(அடுத்த வாரம் ஏவாள்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x