

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஆனிவார ஆஸ்தானம் கடைபிடிக்கப்பட்டது. முந்தைய கால கட்டங்களில் தமிழ் ஆனி மாதம் முடிவடைந்து, ஆடி மாதம் முதல் கோயில் கணக்கு வழக்குகள் பார்க்கப்பட்டு வந்தது. இந்த சாம்பிரதாயத்தின் அடிப்படையில் ஆனி மாதத்தின் கடைசி நாளான்று, ஆனிவரை ஆஸ்தானம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி, மூலவருக்கு நேற்று காலை ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள் கொண்டுவரப்பட்டு, திருமலையில் உள்ள பெரிய ஜீயர் மடத்தில் ஜீயர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மூலவருக்கு சாத்தப்பட்டது. அதன் பின்னர், உற்சவரான ஸ்ரீதேவி, பூதேவி சமேதரான மலையப்பர் முன்னிலையில், கோயில் கணக்கு வழக்குகள் ஒப்படைக்கப்பட்டன. சாவிகள் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.