ஜூலை 14-ல் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜைகள் தொடக்கம் 

திருப்பரங்குன்றம் கோயிலில் தொடங்கிய யாகசாலை பூஜை.
திருப்பரங்குன்றம் கோயிலில் தொடங்கிய யாகசாலை பூஜை.
Updated on
1 min read

மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஜூலை 14-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுவதையொட்டி நேற்று யாகசாலை பூஜைகள் தொடங்கின. முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பின்பு ஜூலை 14-ம் தேதி அதிகாலை 5.25 மணிமுதல் 6.10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதனையொட்டி வள்ளி தேவசேனா திருமண மண்டபத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அங்கு நேற்று மாலை 5 மணியளவில் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. இரண்டாவது நாள் (ஜூலை 11) 2, 3-ம் கால யாகபூஜைகளும், மூன்றாம் நாள் (ஜூலை 12) 4, 5-ம் கால யாக பூஜைகளும், நான்காம் நாள் (ஜூலை 13) 6, 7 கால யாகபூஜைகளும் நடைபெறும்.

அன்றிரவு மதுரையிலிருந்து வரும் மீனாட்சி, சுந்தரேசுவரரை திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெறும். ஐந்தாம் நாள் (ஜூலை 14) கும்பாபிஷேகத்தையொட்டி அதிகாலை 3.45 மணிக்கு எட்டாம் கால யாகபூஜை நடைபெறும். அதிகாலை 5 மணிக்கு யாத்ராதானம் உடன் கலசங்கள் புறப்பாடு நடைபெறும்.

அதனைத்தொடர்ந்து காலை 5.30 மணிக்கு பரிவார மூர்த்திகள், சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுரம், விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். காலை 6 மணிக்கு தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். அன்று மாலை 6.30 மணியளவில் சுப்பிரமணிய சுவாமி பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.

பின்பு மீனாட்சி சுந்தரேசுவரரை வழியனுப்பும் விழா நடைபெறும். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் ப.சத்யபிரியா, துணை ஆணையர் எம்.சூரியநாராயணன் மற்றும் அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in