Last Updated : 20 Jul, 2018 11:15 AM

 

Published : 20 Jul 2018 11:15 AM
Last Updated : 20 Jul 2018 11:15 AM

விவிலிய மாந்தர்கள் 02: ஆசையின் அடையாளம்!

னவே என் அன்பான சகோதரர்களே, சகோதரிகளே சாத்தானிடம் ஏமாந்துவிடாதீர்கள். சோதனைகளைச் சகித்துக்கொண்டே இருக்கும் மனிதன் சந்தோஷமானவன்; ஏனென்றால், கடவுளால்  வாழ்வு என்ற கிரீடம் அவனுக்குக் கிடைக்கும். தன்னிடம் தொடர்ந்து அன்பு காட்டுகிறவர்களுக்கு அதைத் தருவதாக அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். சோதனை வரும்போது, ‘கடவுள் என்னைச் சோதிக்கிறார்’ என்று யாரும் சொல்லக் கூடாது. கெட்ட காரியங்களால் கடவுளைச் சோதிக்க முடியாது, அவரும் யாரையும் சோதிப்பது கிடையாது.

ஒவ்வொருவரும் தங்களுடைய ஆசையால் கவர்ந்திழுக்கப்பட்டு, சிக்கவைக்கப்பட்டு, சோதிக்கப்படுகிறார்கள். பின்பு அந்த ஆசை கருத்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கிறது, பாவம் கடைசியில் மரணத்தை உண்டாக்குகிறது’ என்று எழுதியிருக்கிறார். ஆனால், பூமியின் முதல் மனுஷியாகிய ஏவாள் சாத்தானால் ஏமாற்றப்பட்டாள். ஆசையே அவளை வீழ்த்தியது.

எலும்பின் எலும்பு!

கடவுளாகிய பரலோகத் தந்தை, ஆதாமைப் படைத்து அவனைப் பூமிக்குத் தலைவனாக ஆக்கினார். அப்போது “மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல, அவனுக்குப் பொருத்தமான ஒரு துணையை நான் உண்டாக்குவேன்” என்று கூறியே ஆதாமின் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து ஏவாளைப் படைத்தார். அவளை ஆதாமிடம் கொண்டுவந்தபோது, இவள் தன்னிலிருந்து கடவுளால் உருவாக்கப்பட்டவள், தன்னில் சரிபாதி என்பதை அவனை உணரும்படி செய்தார்.

அதன் பின்னர் ஏவாளைக் கண்ட ஆதாம், “இதோ! இவள் என்னுடைய எலும்பின் எலும்பு! என் சதையின் சதை! இவள் மனுஷி என்று அழைக்கப்படுவாள். ஏனென்றால், இவள் மனுஷனிலிருந்து எடுக்கப்பட்டாள்” என்று அறிக்கையிட்டுக் கூறினான். அதைக் கேட்டு ஏவாள் மகிழ்ந்தாள். ஆதாமும் ஏவாளும் ஒருவர் மீது மற்றொருவர் அன்பு கூர்ந்தனர்.

அவர்களது தோழமையைக் கண்ட கடவுள் “மனிதன் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான். அவர்கள் ஒரே உடலாக இருப்பார்கள்” என்றார். மேலும், கடவுள் அவர்களிடம், “நீங்கள் பிள்ளைகளைப் பெற்று, ஏராளமாகப் பெருகி, பூமியை நிரப்புங்கள்; அதைப் பண்படுத்துங்கள். கடலில் வாழ்கிற மீன்களும் வானத்தில் பறக்கிற பறவைகளும் நிலத்தில் வாழ்கிற எல்லா உயிரினங்களும் உங்கள் அதிகாரத்தின்கீழ் இருக்கட்டும்” என்று சொல்லி ஆசீர்வதித்தார்.

ஆசையின் அறுவடை

ஏவாள் தனித்திருந்த ஒரு பொழுதை, சாத்தான் தன்னுடையதாக மாற்றிக்கொள்ள முயன்றான். ஏதேன் தோட்டத்தில் இருந்த பாம்பின் உடலுக்குள் புகுந்துகொண்டு, அவளுடன் பேசினான். தோட்டத்தின் நடுவில் இருக்கும் மரத்தின் பழத்தைப் பறித்து உண்ணும்படி ஏவாளைத் தூண்டினான். ஆனால், ஏவாள் மறுத்தாள். “தோட்டத்தின் நடுவில் இருக்கிற மரத்தின் பழத்தை நாங்கள் சாப்பிடக் கூடாது என்றும், தொடக் கூடாது என்றும் கடவுள் சொல்லியிருக்கிறார். மீறினால் நாங்கள் செத்துப்போவோம் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்” எனத் தனது கணவனாகிய ஆதாம் தனக்குக் கூறியிருந்த அறிவுரையைக் எடுத்துக்கூறித் திடமாக மறுத்தாள்.

ஆனால், சாத்தான் விடுவதாக இல்லை. “நீங்கள் கண்டிப்பாகச் செத்துப்போக மாட்டீர்கள். அதை நீங்கள் சாப்பிடும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும்;  நன்மை தீமையைத் தெரிந்துகொண்டு கடவுளைப் போல ஆவீர்கள். அது கடவுளுக்குத் தெரியும்” என்று ஆசையைத் தூண்டினான்.

அவன் அப்படிக் கூறியதும் அந்த மரத்தின் பழம் ஏவாளின் கண்களுக்கு மிகவும் நல்லதாகவும் அழகானதாகவும் தெரிந்தது. அதைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு ஆசையாக இருந்தது. ஒரு கட்டத்தில் ஆசையைக் கட்டுப்படுத்த முடியாதவளாக அந்தப் பழத்தைப் பறித்துச் சாப்பிட்டாள். அப்போது அவளைத் தேடிக்கொண்டுவந்த கணவனுக்கும் அந்தப் பழத்தைக் கொடுத்தாள்.  ஆதாமும் அதை வாங்கிச் சாப்பிட்டான். உடனே அவர்களது கண்கள் திறந்தன. தாங்கள் நிர்வாணமாக இருப்பதை உணர்ந்தார்கள். ஆசையின் முதல் அறுவடையாக உடலை மறைக்க அவர்கள் ஆடையைத் தேட வேண்டிய நிலை உருவானது. அதனால், அத்தி இலைகளைத் தைத்து இடுப்பில் கட்டிக்கொண்டார்கள்.

கடவுளாக ஆக முடியாமை

சாத்தான் கூறியதைப் போல் அந்தப் பழத்தை உண்டபின் கடவுளைப் போல் ஆகவில்லை என்பதை இருவருமே பட்டறிந்தார்கள். கடவுளை முகம் கொடுத்து காண முடியாதவர்களாக வெட்கப்பட்டு மரங்களுக்கு நடுவில் ஒளிந்துகொண்டார்கள். கடவுள் வந்து கேட்டபோது ஏவாள், “பாம்பு என்னை ஏமாற்றிவிட்டது” என்று கூறினாள்.  கடவுள் கொடுத்திருந்த கட்டளையை அவள் அறிந்திருந்தும் சாத்தான் தூண்டியதால் கீழ்ப்படியாமல் போனாள். ஆதாமும் தன்னைப் படைத்தவருக்கு உண்மையாக இருக்காமல் தன் மனைவியின் பேச்சுக்கு இசைந்தான்.

நல்லது எது கெட்டது எது எனத் தீர்மானிக்கும் உரிமை கடவுளிடம் மட்டுமே இருந்த நிலையில், அதைச் சுயமாக தீர்மானித்துக்கொண்டு, அந்த உரிமையை ஏவாளும் ஆதாமும் கையில் எடுத்துக்கொண்டார்கள். கீழ்ப்படியாமையின் இந்தத் தன்னிச்சையான செயல்பாடே அவர்களது முதல் பாவம் ஆனது. கடவுளோடு வைத்திருந்த பந்தமும், அவர்களுக்குக் கடவுள் அளித்திருந்த சாகாவரமும் கைவிட்டுப்போனது. அது மட்டுமல்ல; ஏதேன் தோட்டத்தை விட்டு அவர்களைக் கடவுள் வெளியே அனுப்பினார்.

கடவுள் ஆதாமிடம், “நீ உன் மனைவியின் பேச்சைக் கேட்டு, ‘சாப்பிடக் கூடாது’ என்று நான் சொல்லியிருந்த மரத்தின் பழத்தைச் சாப்பிட்டதால் இந்த நிலம் சபிக்கப்பட்டிருக்கும். வயிற்றுப் பிழைப்புக்காக உன் வாழ்நாளெல்லாம் நீ உழைத்து வேலை செய்ய வேண்டியிருக்கும். நிலத்தில் முட்செடிகளும் முட்புதர்களும் முளைக்கும்.

அதில் விளைவதைத்தான் நீ சாப்பிட வேண்டும். நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் மண்ணுக்குப் போகும்வரை நெற்றி வியர்வைச் சிந்தி தான் உணவு சாப்பிடுவாய். நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய்” என்றார். ஏதேனிலிருந்து வெளியே வந்த ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயர் வைத்தான். ஏனென்றால், அவள்தான் உயிருள்ள எல்லாருக்கும் தாய். அவளே ஆசையின் முதல் அடையாளம் ஆகிப்போனாள்.

(அடுத்த வாரம் ஏவாள்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x