Published : 10 Jun 2025 06:03 AM
Last Updated : 10 Jun 2025 06:03 AM
சென்னை / சிறுவாபுரி: சென்னை, செங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள முருகன் கோயில்களில் வைகாசி விசாக திருவிழா நேற்ற கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சிறுவாபுரி முருகன் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார். முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாக நாளை ஒட்டி பெரும்பாலான முருகன் கோயில்களில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறும்.
அந்த வகையில், இந்த ஆண்டு பல்வேறு கோயில்களில் விழா நேற்று நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். அதிகாலையில் இருந்து பக்தர்கள் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், புஷ்ப காவடி, இளநீர் காவடி, பால்குடம் எடுத்தும் வந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். குன்றத்தூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்போரூர் கந்தசாமி கோயில், வல்லக்கோட்டை முருகன் கோயில், குமரன்குன்றம் உள்ளிட்ட கோயில்களில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது. முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
திருத்தணி முருகன் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தங்க கவசம் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. முருகப்பெருமானை தரிசனம் செய்வதற்காக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்தும் பக்தர்கள் திரண்டுவந்தனர். சென்னை வடபழனி முருகன் கோயிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
‘அரோகரா அரோகரா’ என பக்தி கோஷமிட்டு பக்தர்கள் வழிபட்டனர். 10 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப், இந்து சமய அறநிலையத் துறையின் திருவள்ளூர் உதவி ஆணையர் சிவஞானம், கோயில் செயல் அலுவலர் மாதவன், அர்ச்சகர் ஆனந்தன் குருக்கள் ஆகியோர், பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.
முதலில் விநாயகரை தரிசனம் செய்த ஆளுநர், பின்னர் மூலவரை தரிசனம் செய்தார். தொடர்ந்து, அவர், ஈஸ்வரன், வள்ளி மணவாளன், அம்பாள், ஆதிமூலவர், பைரவர் ஆகியோரை தரிசனம் செய்தார். இதுதவிர, தமிழகம் முழுவதும் முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் குவிந்து, முருகப் பெருமானை வழிபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT