கண் பார்வை அருளும் கீழ சூரியமூலை சூரிய கோடீஸ்வரர் | ஞாயிறு தரிசனம்

கண் பார்வை அருளும் கீழ சூரியமூலை சூரிய கோடீஸ்வரர் | ஞாயிறு தரிசனம்
Updated on
1 min read

மூலவர்: சூரிய கோடீஸ்வரர் அம்பாள்: பவளக்கொடி அம்மன் தல வரலாறு: பிரதோஷ வழி பாட்டில் தன்னால் பங்கேற்க இயலவில்லையே என்று சூரியன், யக்ஞவல்கிய மாமுனியிடம் தெரிவித்தார். சூரியனிடம் இருந்து வேதங்களைக் கற்ற மாமுனி, தனதுகுருநாதரின் வருத்தத்தை தீர்த்துவைக்கும்படி, சூரிய கோடிப்பிரகாசரிடம் வேண்டினார். பின் மாமுனி, தான் கற்றுக்கொண்ட வேதங்களை தட்சணையாக, வேதாக்கனி யோக பாஸ்கரச் சக்கர வடிவில் அவற்றின் பலன்களைப் பொறித்து ஈசனின் பாதங்களில் அர்ப்பணித்தார். வேதசக்திகள் இறைவனின் திருவடிகளில் இலுப்பை மரமாக வளர்ந்தது. இம்மரத்தில் உருவான இலுப்பை கொட்டைகளில் இருந்து எடுக்கப்பட்ட இலுப்பை எண்ணெய்யால் தீபம் ஏற்றத் தொடங்கினார் மாமுனி. அன்று முதல் தினமும் மாலையில் (பிரதோஷ வேளையில்) இந்த வழிபாடு நடந்தது. மறுநாள் காலையில் சூரிய உதயத்தின்போது சூரிய பகவான், இந்த இலுப்பை எண்ணெய் தீபங்களை தரிசித்து பிரதோ‌ஷ வழிபாட்டின் பலன் அனைத்தையும் பெற்றார் என்பது புராண வரலாறு.

கோயில் சிறப்பு: சூரியனுக்கு மூலாதார சக்தியை கொடுத்ததால் சூரியமூலை என இத்தலம் அழைக்கப்பட்டது. சூரியனார் கோவிலில் தன் குஷ்ட நோய் நீங்கப் பெற்ற சூரியன், இத்தலத்தில் தன் முழு சக்தியையும் பெற்றார். இங்குள்ள மூலவரை காலை முதல் மாலை வரை சூரிய பகவான் தனது பொற்கதிர்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம். சூரிய தோஷம், கண் நோய் உள்ளவர்களுக்கு சூரிய கோடீஸ்வரர் அருள்பாலிப்பதாக ஐதீகம்.

சிறப்பு அம்சம்: இத்தல சொர்ண பைரவருக்கு தீபாராதனைகாட்டும்போது அவரது கண்டத்தில் சன்னமாக பவளமணி அளவில் சிவப்பு ஒளி வெளிப்படுவதும், அது மெல்ல அசைவதும் பக்தர்களை மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி ஆகும். அமைவிடம்: கும்பகோணத்திலிருந்து கிழக்கே 15 கிமீ கஞ்சனூர் வழியாக திருலோகி செல்லும் பேருந்தில் சென்றால் கோயிலருகே இறங்கிக் கொள்ளலாம். கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6-12, மாலை 4-7 வரை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in