ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா கொடியிறக்க நிகழ்ச்சி - ஆயிரக்கணக்கான மக்கள் பிரார்த்தனை

ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா கொடியிறக்க நிகழ்ச்சி - ஆயிரக்கணக்கான மக்கள் பிரார்த்தனை
Updated on
1 min read

ஏர்வாடி தர்ஹா 851ம் ஆண்டு சந்தனக் கூடு திருவிழா கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் புகழ் பெற்ற மகான் குத்பு சுல்தான் செய்யது இஃபுராஹீம் ஷகீது ஒலியுல்லாஹ் பாதுஷா நாயகம் 851ம் ஆண்டு சந்தனக் கூடு சமூக நல்லிணக்க திருவிழா ஏப்.29ம் தேதி புகழ்மாலை எனப்படும் மவ்லீது ஷரீப்புடன் தொடங்கியது. அதனையடுத்து மே 9ல் கொடியேற்றம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு திருவிழா மே 22 அதிகாலை 3 மணிக்கு ஏர்வாடி முஜாவீர் நல்ல இஃபுராஹீம் தர்ஹாவில் இருந்து சந்தனக்கூடு எடுத்து, அலங்கார ரதத்துடன் ஊர்வலம் புறப்பட்டு, அதிகாலை 5.50 மணியளவில் தர்ஹா வந்தடைந்தது. சந்தனக்கூடு தர்ஹாவை மூன்று முறை வலம் வந்த பின்பு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

அதைத் தொடர்ந்து மக்பராவில் பச்சை மற்றும் பல வண்ண போர்வைகளால் போற்றப்பட்டு மல்லிகை பூ சரங்களால் அலங்கரிக்கப்பட்டு சந்தனம் பூசப்பட்டது. இத்திருவிழாவில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியான கொடியிறக்கம், ராமநாதபுரம் மாவட்ட தலைமை ஹாஜி சலாவுதீன் ஆலீம், ஹலிபா ஹெச்.சுல்தான் செய்யது இஃப்ராகீம் லெவ்வை மற்றும் ஹக்தார்கள் புகழ்மாலை ஓதிய பின்பு மக்களுக்கு பிரசாதமாக நெய் சோறு நேர்ச்சை வழங்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை, ஹக்தார்கள் கமிட்டி தலைவர் அகமது இஃப்ராகீம், செயலாளர் சித்திக், உப தலைவர் முகம்மது சுல்தான் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in