பசுவுக்கு தரிசனம் அளித்த குட்டையூர் மாதேஸ்வரர் | ஞாயிறு தரிசனம்

பசுவுக்கு தரிசனம் அளித்த குட்டையூர் மாதேஸ்வரர் | ஞாயிறு தரிசனம்
Updated on
1 min read

மூலவர்: மாதேஸ்வரர் தல வரலாறு: குட்டையூர் பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்ற காராம்பசு, ஓரிடத்தில் நின்று தானாகவே பால் சொரிந்தது. பசுவின் மடியில் பால் குறைவது கண்டு குழம்பிய மக்கள், ஒருநாள் அதைப் பின்தொடர்ந்து சென்று பார்த்தபோது, அங்கிருந்த சிவலிங்கத் திருமேனியைக் கண்டு அதிசயித்தனர். பின்னர் அங்கே கோயில் அமைத்து வழிபடத் தொடங்கினர். இச்சம்பவம் நிகழ்ந்து ஏறத்தாழ 1,000 ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கோயில் சிறப்பு: வீட்டில் சுபகாரியம் நடத்துவதாக இருந்தாலோ, நிலத்தில் விதைப்பதற்கு நாள் குறித்துவிட்டு செயல்படுவதாக இருந்தாலோ, ஈஸ்வரனிடம் பூப்போட்டு சம்மதம் கேட்கும்சடங்கு பக்தர்களிடம் உள்ளது. அதில் சம்மதம் கிடைத்துவிட்டால், வீட்டில் சுபகாரியம் விமரிசையாக நடந்தேறி விடும், விளைச்சல்அந்த முறை அமோகமாக இருக்கும் என்பது ஐதீகம்.

சிறப்பு அம்சம்: சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து,காராம்பசு வணங்கியதால், ஊர் மக்களுக்கு சிவ தரிசனம் கிடைத்தது. இதன் காரணமாக குட்டையூரிலும் சுற்றுவட்டாரத்திலும் கால்நடைகளுக்கு ஏதேனும் பிரச்சினை, நோய் என்றால், சிவனாரை வழிபட்டு, தீர்த்தப் பிரசாதம் வாங்கிச் சென்று, கால்நடைகளுக்குத் தருகின்றனர். இதனால், விரைவில் அவை குணமாகி விடும் என்பது நம்பிக்கை.

பிரார்த்தனை: பிள்ளை வரம் வேண்டுவோர், ஈஸ்வரனை தரிசித்து, நந்தியை, பிரதிஷ்டை செய்வதாக வேண்டிக் கொள்கின்றனர். பிள்ளை பிறந்ததும் கோயில் சுற்றுச் சுவர்களில் புதியநந்தி சிலைகளை வைத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்திச் செல்கின்றனர். வீடு, மனை வாங்க, தொழிலில் லாபம் அதிகரிக்க பௌர்ணமி கிரிவலம் வந்து, நந்தி பிரதிஷ்டை செய்வதாக, வேண்டிக் கொள்கின்றனர். குழந்தை பொம்மை சுதைச் சிற்பங்களைச் செய்து வைப்பவர்களும் உண்டு. அமைவிடம்: கோவை - மேட்டுப்பாளையம் பேருந்து பாதையில் குட்டையூரில் இறங்கி, சிறிது தூரம் நடந்தால், குன்றுக் கோயிலை அடையலாம். கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7 முதல் மாலை 4 மணி வரை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in