காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்: திரளான பக்தர்கள் வழிபாடு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ தோரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ தோரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
Updated on
1 min read

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (மே 17) நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலைகளில் திரண்டு பெருமாளை வழிபட்டனர்.

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் மூலம் உலகப் புகழ் பெற்றது வரதராஜ பெருமாள் கோயில். இந்தக் கோயில் 108 வைணவ திவ்யா தேசங்களில் ஒன்று. இந்தக் கோயிலின் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த பிரம்மோற்சவத்தையொட்டி காலை, மாலை இரு வேளையும் பெருமாள் வீதியுலா வரும் நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த பிரம்மோற்சவத்தில் புகழ்பெற்ற உற்சவங்கள் கருட சேவை உற்சவம் மற்றும் தேரோட்டம் ஆகும். இந்த உற்சவங்களைக் காண காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமின்றி, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் காஞ்சிபுரத்துக்கு வருகை தருவர். கருட சேவை கடந்த 14-ம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் இன்று (மே 17) தேரோட்டம் நடைபெற்றது.

இந்த தேரோட்டத்தையொட்டி அதிகாலையில் சாமி புறப்பட்டு தேரடியில் உள்ள தேருக்கு வந்ததது. காலை 6 மணிக்கு மேல் திருத்தேர் புறப்பட்டது. அங்கிருந்து ராஜ வீதிகள் வழியாக வந்த தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது. சுமார் 2 லட்சம் பேர் இந்த தேரோட்டத்தை கண்டு வழிபட்டனர்.

இந்தத் தேரோட்டம் காரணமாக காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகளில் மக்கள் திரண்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் ஆங்காங்கே 5 தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் இறக்கிவிடப்பட்டனர். தற்காலிக கடைகள் பலவும் இந்த விழாவையொட்டி அமைக்கப்பட்டிருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in