பல லட்சம் பக்தர்களுக்கு தரிசனம் அளித்துவிட்டு அழகர்மலைக்கு திரும்பினார் கள்ளழகர்!

அழகர்மலை திரும்பிய கள்ளழகரை ஏராளமான பக்தர்கள் மலர்தூவி வரவேற்று வழிபட்டனர்.
அழகர்மலை திரும்பிய கள்ளழகரை ஏராளமான பக்தர்கள் மலர்தூவி வரவேற்று வழிபட்டனர்.
Updated on
2 min read

மதுரை: சித்திரைத் திருவிழாவையொட்டி அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட கள்ளழகர், பல லட்சம் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து விட்டு இன்று (மே 16) காலையில் கோயிலுக்கு திரும்பினார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மலர்கள் தூவி வரவேற்றனர். அப்போது 21 பெண்கள் பூசணிக்காயில் தீபமேற்றி கள்ளழகருக்கு திருஷ்டி கழித்தனர்.

மதுரை அழகர்கோவில், கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 8-ல் தொடங்கியது. மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்க சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடத்தில் நேரிக்கம்புடன் மே 10-ல் அழகர்மலையிலிருந்து தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். மே 11-ல் மூன்றுமாவடியில் எதிர்சேவை நடந்தது. அன்றிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.

மே 12-ல் ஆண்டாள் சூடிக்களைந்த மாலையை சூடிக் கொண்டு ஆயிரம் பொன்சப்பரத்தில் எழுந்தருளினார். பின்பு சித்ரா பவுர்ணமியன்று அன்று காலை 5.59 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பின்பு ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.மே 13-ல் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு சாப விமோனம் அளித்தார். அன்றிரவு தொடங்கி மே 14-ல் காலை வரை தசாவதாரம் நடந்தது.

ராமராயர் மண்டபத்திலிருந்து திருமஞ்சனமாகி அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் மண்டகப்படிகளில் எழுந்தருளி அன்றிரவு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டகப்படியில் எழுந்தருளினார். பின்பு அங்கு மே 15-ல் அதிகாலையில் 3.30 மணியளவில் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். பின்னர், தல்லாகுளம் கருப்பணசாமியிடம் உத்தரவு பெற்று தல்லாகுளம் பெருமாள் கோயிலில் எழுந்தருளி அன்றிரவு மூன்றுமாவடியில் மக்களிடம் விடைபெற்று மலைக்கு திரும்பினார்.

அன்றிரவு சுந்தரராஜன்பட்டி மறவர் மண்டபத்தில் கள்ளழகரின் பயணத்தால் ஏற்பட்ட உடல் களைப்பை போக்கும் வகையில், கோயில் பட்டர் கை, கால்கள் பிடித்துவிடும் நிகழ்வு நடந்தது. அதனைத்தொடர்ந்து இன்று (மே 16) காலையில் அப்பன்திருப்பதி ஜமீன்தார் மண்டபம், கள்ளந்திரி, பொய்கைக்கரைப்பட்டி வழியாக காலை 10 மணியளவில் கோயில் கோட்டை வாசல் பகுதியில் நுழைந்தார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என கோஷமிட்டு, கள்ளழகரை மலர்கள் தூவி வரவேற்றனர்.

பின்னர் கருப்பணசாமி கோயிலில் தீபாராதனை முடிந்து கோயிலுக்குள் நுழைந்தபோது 21 சுமங்கலி பெண்கள் பூசணிக்காயில் கற்பூர தீபமேற்றி திருஷ்டி கழித்தனர். பின்னர் 10.40 மணியளவில் கோயிலுக்குள் சென்று இருப்பிடம் சேர்ந்தார். 10-ம் நாளான மே 17-ல் உற்சவ சாற்றுமுறையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. கள்ளழகர் மலையிலிருந்து புறப்பட்டு மீண்டும் மலைக்குத் திரும்பும் வரை 494 மண்டகப்படிகளில் எழுந்தருளி பல லட்சம் பக்தர்களுக்கு அருளாசி தந்தார். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையர் ந.யக்ஞ நாராயணன் தலைமையில் அறங்காவலர்கள், கோயில் பணியாளர்கள் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in