மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்: பக்தர்கள் பரவசம்

படங்கள்:நா.தங்கரத்தினம்
படங்கள்:நா.தங்கரத்தினம்
Updated on
2 min read

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் பத்தாம் நாளான இன்று (மே.8) காலையில் மீனாட்சி சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாணம் காலை 8.51 மணியளவில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். திருமணமான பெண்கள் புதுத்தாலி அணிந்து கொண்டனர்.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் காலை, மாலையிலும் சுவாமி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள்கின்றனர்.

முக்கிய விழாக்களான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் எட்டாம் நாளான மே 6-ம் தேதி இரவு 7.35 மணியளவில் நடைபெற்றது. மீனாட்சி அம்மன் வைர ராயர் கிரீடம், நவரத்தின செங்கோலுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஒன்பதாம் நாளான நேற்று (மே 7) மீனாட்சி அம்மனுக்கு திக்கு விஜயம் நடைபெற்றது.

பத்தாம் நாளான இன்று (மே 8) காலை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. அதற்கு முன்பாக அதிகாலை 4 மணியளவில் வெள்ளி சிம்மாசனத்தில் மீனாட்சி அம்மன் பிரியாவிடை சுந்தரேசுவரர் நான்கு மாசி வீதீகளில் எழுந்தருளினர். திருப்பரங்குன்றம் முருகன் கோயிலிலிருந்து புறப்பட்ட சுப்பிரமணிய சுவாமி தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் கோயிலை வந்தடைந்தனர்.

கோயில் வளாகத்தில் ஆடி வீதியில் நடைபெறும் திருக்கல்யாண மேடை 10 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதனையொட்டி திருக்கல்யாண மேடைக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை காலை 7.55 மணிக்கு மேடையில் எழுந்தருளினர். பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் காலை 7.58 மணிக்கு எழுந்தருளினர்.

அதனைத்தொடர்ந்து மீனாட்சி அம்மன் 8.04 மணியளவில் மேடையில் எழுந்தருளினர். பவளக்கனிவாய் பெருமாள் காலை 8.06 மணியளவில் மேடையில் எழுந்தருளினார். பின்னர் காலை 8.13 மணியளவில் விநாயகர் பூஜையுடன் மங்கல வாத்தியங்கள் முழங்க விநாயகர் பூஜையுடன் திருக்கல்யாணம் தொடங்கியது.

சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்தனர். பூஜைக்கு பின்பு 8.41-க்கு காப்பு கட்டப்பட்டது. காலை 8.43 மணியளவில் தாரைவார்க்கும் வைபவம் நடைபெற்றது. காலை 8.45 மணியளவில் மாலைகள் மாற்றும் வைபவம் நடந்தது. கோயில் நிர்வாகம் சார்பில் சுவாமி, அம்மனுக்கு பட்டு வஸ்திரம் சாற்றப்பட்டது. காலை 8.51-க்கு திக்கல்யாணம் நடைபெற்றது.பின்பு தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றது. அப்போது திருமணமான பெண்கள் புதுத்தாலியை அணிந்து கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

அதனைத்தொடர்ந்து சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் மே 9 காலை 6.30 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறும். 12-ம் நாள் (மே 10) தீர்த்த பூஜையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், இணை ஆணையர் ச.கிருஷ்ணன், அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in