திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளத்தில் ராகு, கேது பெயர்ச்சி விழா

திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் ராகு பகவானுக்கு நடைபெற்ற தீபாராதனை. (அடுத்த படம்) சிறப்பு அலங்காரத்தில் கீழப்பெரும்பள்ளம்  கேது பகவான்
திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் ராகு பகவானுக்கு நடைபெற்ற தீபாராதனை. (அடுத்த படம்) சிறப்பு அலங்காரத்தில் கீழப்பெரும்பள்ளம் கேது பகவான்
Updated on
1 min read

திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோயில்களில் நேற்று ராகு, கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராகு, கேது பெயர்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று மாலை 4.20 மணிக்கு ராகு பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் இடம்பெயர்ந்தனர்.

இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் தனி சந்நிதியில் அருள்பாலிக்கும் ராகு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து, ராகு பகவான் வெள்ளி சேஷ வாகனத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

நாளை (ஏப்.28) சந்தனக்காப்பு அலங்காரம், லட்சார்ச்சனை பூர்த்தி மற்றும் மகா தீபாராதனை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை துணை ஆணையர் தா.உமாதேவி, அறங்காவலர் குழுத் தலைவர் சி.சிவகுருநாதன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

கீழப்பெரும்பள்ளத்தில்... மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோயிலில் உள்ள கேது பகவான் சந்நிதியில் நேற்று கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதையொட்டி, கேது பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அன்பரசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in