காஞ்சி சங்கரமடத்தின் அடுத்த பீடாதிபதியாக கணேச சர்மா டிராவிட் அறிவிப்பு

கணேச சர்மா டிராவிட் | கோப்புப் படம்
கணேச சர்மா டிராவிட் | கோப்புப் படம்
Updated on
1 min read

காஞ்சிபுரம்: காஞ்சி சங்கரமடத்தின் அடுத்த பீடாதிபதியாக கணேச சர்மா டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வரும் 30-ம் தேதி சன்யாச தீக்‌ஷயை காஞ்சி சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கவுள்ளார்.

இது தொடர்பாக காஞ்சி சங்கர மட ஸ்ரீகார்யம் (மேலாளர்) சல்லா விஸ்வநாத சாஸ்திரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் காஞ்சிபுரத்தில் அட்சய திருதியை நாளில் (ஏப்.30, 2025) ஸ்ரீ துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்ரமணிய கணேச சர்மா திராவிட்-டுக்கு சன்யாச தீக்‌ஷை வழங்குகிறார். இந்தப் புனித நிகழ்வு கிமு 482-இல் காஞ்சிபுரத்தில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தை நிறுவிய ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியாரின் 2534 ஜெயந்தி மஹோத்ஸவத்துடன் (மே 2, 2025) ஒத்துப்போகிறது.

ஆந்திரப் பிரதேசத்தின் அன்னவரம் க்‌ஷேத்திரத்தைச் சேர்ந்த ரிக் வேத அறிஞர் ஸ்ரீ கணேச சர்மா டிராவிட், தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத், நிர்மல் மாவட்டம், பாசரா, ஸ்ரீ ஞான சரஸ்வதி தேவஸ்தானத்தில் பணியாற்றியவர். ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் பூஜ்ய ஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிகளின் ஆசிர்வாதமும், தொடர்ச்சியான அருளும் அவருக்கு 2006 -ஆம் ஆண்டு வேதக் கல்வியைத் தொடங்கிய காலத்திலிருந்தே கிடைத்துள்ளது.

ஸ்ரீ கணேச சர்மா டிராவிட், ரிக் வேதத்துடன் யஜுர் வேதம், சாம வேதம், ஷடங்கங்கள், தஷோபநிஷாத்ரிகங்கள் மற்றும் தஷோபநிஷாத்ரிகப் படிப்புகளையும் முடித்துள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Important Announcement #kamakoti pic.twitter.com/YXn1GTHQex

இளைய மடாதிபதியாக... - காஞ்சிபுரம் மாநகரில் பிரிசித்தி பெற்ற சங்கர மடம் உள்ளது. இந்த மடத்தின் 70-வது மடாபதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருந்து வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சமாதி அடைந்ததைத் தொடர்ந்து இளைய மடாதிபதியாக இருந்த விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 70-வது பீடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் இளைய மடாதபதி தேர்வு கடந்த 6 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளையமடாதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கணேச சர்மா டிராவிட் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிட்டுள்ளார். இளையமடாதிபதியாக பொறுப்பேற்கும் கணேச சர்மா டிராவிட் வரும் மே 2-ம் தேதி நடைபெறும் ஆதிசங்கரர் ஜெயந்தியில் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுடன் இணைந்து பங்கேற்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in