‘ஓம்சக்தி பராசக்தி’ முழக்கத்துடன் சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்

திருச்சி சமயபுரத்தில் நேற்று நடைபெற்ற மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டத்தில் வடம் பிடித்து தேர் இழுத்த பக்தர்கள். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன். | படங்கள்: ர.செல்வமுத்துகுமார் |
திருச்சி சமயபுரத்தில் நேற்று நடைபெற்ற மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டத்தில் வடம் பிடித்து தேர் இழுத்த பக்தர்கள். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன். | படங்கள்: ர.செல்வமுத்துகுமார் |
Updated on
1 min read

திருச்சி: சமயபுரத்தில் நேற்று மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேர் திருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘ஓம்சக்தி பராசக்தி’ முழக்கத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேரோடும் வீதிகளில் வலம் வந்த தேர் பிற்பகல் 3 மணிக்கு நிலையை அடைந்தது.

நேற்று வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் வடம் பிடித்த பக்தர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. மேலும், நீர்மோர், பானகம், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. திருச்சி மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் தலைமையில் 1,263 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 80 சிசிடிவி கேமராக்கள், 4 ட்ரோன்கள் மூலம் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து சேர்ந்தனர். இதனால், திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், அலகு குத்தி, காவடி எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும், பால் குடங்கள் மற்றும் முளைப்பாரிகள் எடுத்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இன்று (ஏப்.16) இரவு 8 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்திலும், நாளை புஷ்ப பல்லக்கிலும் அம்மன் வீதியுலா செல்கிறார். வரும் 18-ம் தேதி தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் இளங்கோவன், இணை ஆணையர் பிரகாஷ் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in