தமிழ்ப் புத்தாண்டு தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு தரிசனம்

தமிழ்ப் புத்தாண்டு தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு தரிசனம்
Updated on
1 min read

சென்னை: தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் நடந்த சிறப்பு தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். முருகன் கோயில்களில் நீண்ட வரிசையில் காத்திருத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சித்திரை முதல் நாளான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், தமிழ்ப் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடி வருகின்றனர். தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று (ஏப்.14) முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, அத்திமரத்தாலான முருகபெருமானின் விக்கிரங்களைச் செய்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பரமணிய சுவாமி கோயிலில், பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. முருகபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஏராளமான பக்தர்கள், கடல் மற்றும் நாலு கிணற்றில் புனித நீராடிவிட்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதிகமான பக்தர்களின் வருகையையொட்டி, நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். மேலும், பழனி, மருதமலை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முருகன் கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், இன்று அதிகாலை முதலே திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம், முத்துமாலை, தங்கப்பாவாடை அணிவிக்கப்பட்டும், சுந்தரேசுவரருக்கு வைர வைடூரிய ஆபரணங்களும், வைர நெற்றிப்பட்டையும் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, மீனாட்சி அம்மனுக்கு பட்டுச்சேலை சாற்றி ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in