திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி: திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தர்கள்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

காரைக்கால்: திருக்கணித பஞ்சாங்கத்தின்படி நேற்று சனிப்பெயர்ச்சி நிகழ்ந்த நிலையில், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வழக்கமான பூஜைகள் நடைபெற்றாலும், தரிசனத்துக்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சந்நிதியுடன் கூடிய தர்பாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வாக்கிய பஞ்சாங்க முறைப்படியே சனிப் பெயர்ச்சி விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2026 மார்ச் மாதம் இக்கோயிலில் சனிப் பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது.

இந்நிலையில், திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் நேற்று சனிப்பெயர்ச்சி நிகழ்ந்தது என்பதாலும், நாட்டில் பெரும்பாலானவர்கள் திருக்கணித பஞ்சாங்கத்தைப் பின்பற்றுவோராக இருப்பதாலும் நேற்று திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்களின் வருகை அதிகளவில் இருந்தது.

அதேநேரத்தில், கோயிலில் வழக்கமாக நடைபெறும் பூஜைகளே நேற்றும் நடைபெற்றன. சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். நளன் தீர்த்தக் குளத்திலும் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே புனிதநீராடி, நளன் கலி தீர்த்த விநாயகர் கோயிலில் வழிபாடு செய்த பின்னர், தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் வருகை அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் கூடுதல் தடுப்புகள் அமைக்கப்பட்டு, ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in