ஞாயிறு தரிசனம்: சாப விமோசனம் அளிக்கும் மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள்

ஞாயிறு தரிசனம்: சாப விமோசனம் அளிக்கும் மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள்
Updated on
1 min read

மூலவர்: உலகுய்ய நின்றான் அம்பாள்: நிலமங்கை தாயார்

தல வரலாறு : மல்லேஸ்வர பல்லவன் ஆட்சியில், அன்னதானம் வழங்கப்படாததால் மக்கள் பசியால் வாடினர். கோபமடைந்த வைணவ அடியார்கள், ‘முதலையாக இருப்பாய்’ என்று மன்னனுக்கு சாபமிட்டனர். அங்குள்ள புண்டரீகபுஷ்கரணி குளத்தில் முதலை உருவில் மன்னன் வாழ்ந்து வந்தான். முன்பு காடாக இருந்த இப்பகுதியில் புண்டரீக மகரிஷி தவம்செய்து வந்தார். அந்தக் குளத்தில் இருந்து 1,000 தாமரை மலர்களை பறித்து பெருமாளுக்கு அர்ப்பணிக்க மகரிஷி அங்கு சென்றார். குளத்து நீரில் முதலை உருவில் வசித்து வந்த மன்னன் மகரிஷியிடம் தன் தவறுக்கு வருந்தி சாப விமோசனம் பெற்றான். கடல்நீர் முழுவதையும் இறைத்துவிட்டு திருப்பாற்கடல் சென்று பெருமாளுக்கு தாமரை மலர்களை அர்ப்பணிக்க எண்ணிய மகரிஷியின் முன்பு முதியவர் வடிவில் பெருமாள் தோன்றி தமக்கு உணவளிக்க வேண்டினார். உணவுடன்மகரிஷி திரும்புவதற்குள் தாமரை மலர் சூடி தரையிலேயே சயன கோலத்தில் பள்ளிகொண்டார் திருமால். திரும்பி வந்த முனிவர் ஆனந்தத்துடன் பெருமாளை தரிசித்தார்.

சிறப்பு அம்சம்: உற்சவப்பெருமாள் கையில் தாமரை மலருடன் நிற்கும் ஒரே திருத்தலம். திருமாலின் கதாயுத அம்சமான பூதத்தாழ்வார் அவதரித்த தலம். கலியுகத்தின் முடிவில், தான் எடுக்கப் போகும் கல்கி அவதாரத்தை ஸ்தல சயனப் பெருமாள் முன்னதாகவே திருமங்கையாழ்வாருக்கு காட்ட ஆழ்வாரும் ஞானக் கண்ணால் கண்டார். இதன் மூலம் ஸ்தல சயனப் பெருமாளே கல்கி அவதாரம் எடுக்கப் போகிறார் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பிரார்த்தனை: லட்சுமி நரசிம்மருக்கு பானகம் படைத்து, நெய்தீபமேற்றி ருண விமோசன ஸ்தோத்திர பாராயணம் செய்து வழிபட்டால் கடன் தொல்லை அகலும் என்பது ஐதீகம். மாசிமகம் தினத்தில் இத்தல தீர்த்தத்தில் நீராடினால், ராமேஸ்வரத்தில் நீராடிய புண்ணியமும்,சாப விமோசனமும் கிடைக்கும்.

அமைவிடம்: திருவான்மியூரில் இருந்து புதுச்சேரி செல்லும் ஈசிஆர் சாலையில் 55 கிமீ தொலைவில் உள்ளது. கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 7-12, மாலை 4-8 வரை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in