திருச்செந்தூரில் மாசி திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருச்செந்தூரில் மாசி திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Updated on
1 min read

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு திருத்தேர் வடம்பிடித்து இழுத்தனர்.

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் 10-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. காலை 7.03 மணிக்கு விநாயகர் தேர் புறப்பட்டு, நான்கு ரதவீதிகளிலும் பவனி வந்து, 7.45 மணிக்கு நிலையம் வந்து சேர்ந்தது.

பின்னர், சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி- தெய்வானையுடன் எழுந்தருளிய பெரிய தேரை காலை 7.50 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரதவீதிகளிலும் பவனி வந்து 11 மணிக்கு நிலையம் வந்து சேர்ந்தது. தொடர்ந்து, தெய்வானை அம்பாள் மட்டும் எழுந்தருளிய தேர் 11.10 மணிக்கு புறப்பட்டு ரதவீதிகளில் பவனி வந்து பகல் 12.35 மணிக்கு நிலையம் வந்து சேர்ந்தது.

தேரோட்டத்தில் தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் வஷித்குமார், திருச்செந்தூர் சார்பு நீதிபதி செல்வபாண்டி, திருச்செந்தூர் நீதித்துறை நடுவர் வரதராஜன், முன்னாள் தக்கார் ரா.கண்ணன் ஆதித்தன், கோயில் இணை ஆணையர் சு.ஞானசேகரன், உதவி ஆணையர் நாகவேல், இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மேற்பார்வையில் போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். 11-ம் நாள் திருவிழாவான இன்று (மார்ச் 13) மாலை தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in