Last Updated : 20 Jul, 2018 11:03 AM

Published : 20 Jul 2018 11:03 AM
Last Updated : 20 Jul 2018 11:03 AM

வில்வமும் துளசியும் இணைந்த பூக்குடலை

அனந்த வாசுதேவர் ஆலயம், அகசண்டி ஆலயம், பரதேஸ்வர் ஆலயம், ராஜா ராணி ஆலயம், முக்தேஸ்வரர் ஆலயம், ப்ரிங்கேஸ்வரர் ஆலயம், பிரம்மேஸ்வரர் ஆலயம், சக்ரேஸ்வரி சிவன் ஆலயம், சந்திரசேகர மகாதேவ ஆலயம், தேவசபா ஆலயம், திஷீஸ்வர சிவாலயம், துலாதேவி ஆலயம்,கோபாலதீர்த்த மாதா ஆலயம், கெளசி சங்கரர் ஆலயம், குசேஸ்வர ஆலயம், லட்டு பாபா ஆலயம் என்று இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. 

ஒடிசா மாநிலத்தின் தலைநகரமான   புவனேஸ்வரில் இருக்கும் கோயில்களின் ஒருபகுதிப் பட்டியல் இது. ‘மூவுலகிற்கும் இறைவன்’ என்பது தான் ‘திருபுவனேஸ்வர்’-ன் அர்த்தம். காலமும் ஆக்கிரமிப்புகளும் தொடர்ந்து முயன்றும் 500க்கும் மேற்பட்ட தொன்மையான ஆலயங்கள் இன்னமும் கம்பீரமாய் இங்கு நின்று கொண்டிருக்கின்றன. புராணங்களில் இதை ‘ஏகாம்பர க்ஷேத்திரம்’ என்றும் சைவபிதா என்றும் அழைக்கின்றனர்.

ஏழாம் நூற்றாண்டிலிருந்து பதினொன்றாம் நூற்றாண்டுவரை இந்தப் பகுதியை ஆண்ட கலிங்க அரசர்கள் இங்கு பல கோயில்களை எழுப்பி இருக்கிறார்கள். ஒடிசாவிலுள்ள பூரி, கொனாரக், புவனேஸ்வர் ஆகிய மூன்றையும் ‘தங்க முக்கோணம்’ என்று அழைப்பதுண்டு.

அலையில்லாத கடலோ என்று எண்ணவைக்கும் அளவுக்கு அகலமாக, சட்டென்று மறுகரை தெரிந்துவிடாத அளவுக்குக் கோயிலின் திருக்குளம் காட்சி தருகிறது. பெயரோ பிந்து சாகர். அதற்கு நடுவே ஒரு நீராழி மண்டபம் உள்ளது. புவனேஸ்வர் நகரத்தை கோயில் நகரம் என்று குறிப்பிடுவதன் காரணத்தை நம்மால் உணர முடிகிறது.  அத்தனை ஆலயங்களிலும் மிகப் பழமையானது புவனேஸ்வரிலுள்ள லிங்கராஜர் ஆலயம்.

புவனேஸ்வரின் மிகத் தொன்மையான ஆலயம் மட்டுமல்ல, மிகப் பெரிய ஆலயமும் லிங்கராஜர் ஆலயம்தான். பதினொன்றாம் நூற்றாண்டில் ஜஜாதி கேசரி என்ற மன்னனால் கட்டப்பட்டது. அவன் தனது தலைநகரை ஜெய்ப்பூரிலிருந்து புவனேஸ்வருக்கு மாற்றியபோது லிங்கராஜர் ஆலயத்தை நிர்மாணிக்கத் தொடங்கினான்.

பிரம்ம புராணத்திலும் இந்த ஆலயம் குறித்துக் கூறப்படுகிறது. ஆலய நுழைவு வாயிலை அணுகும்போது கைகளில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் நம் பைகளை சோதனை இடுகிறார்கள். ஒளிப்படங்களுக்கும் வீடியோவுக்கும் அனுமதி கிடையாது.

உள்ளே நுழைந்ததும் பல கடைகள்.  பூக்களையும் இலைகளையும் சிறுகுடலையில் வைத்து மேலே மிகச் சிறிய மண் அகலில் நெய் தீபம் வைத்து கடைகளில் விற்கிறார்கள்.

சிம்ம துவார நுழைவுவாயில்

லிங்கராஜர் ஆலயம், கலிங்கக் கட்டிடக் கலையின் கம்பீரத்தை பளிச்சென்று வெளிப்படுத்துகிறது. மென்மையாகத் தெரியும் சிவப்புக் கல்லில் இந்த ஆலயம் உருவாக்கப்பட்டுள்ளது. 55 மீட்டர் உயரம் கொண்ட 25,000 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ள ஆலயம் இது.

லிங்கராஜர் ஆலயத்தை நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். கருவறை, வேள்வி மண்டபம், கோக மண்டபம் மற்றும் நாட்டிய சாலை.

சிம்ம துவாரம் எனும் நுழைவு வாயில் வழியாக உள்ளே நுழையலாம்.    நுழைகையில் இருபுறமும் யானைகளைக் தங்கள் காலடியில் போட்டு நசுக்கும் சிங்கங்களின் உருவங்களைக் காண முடிகிறது. கருவறையிலுள்ள சிவலிங்கம் சுயம்பு – அதாவது,தானாகவே உருவானது. அருகே விநாயகர், கார்த்திகேயர், பார்வதி ஆகியோரின் திருவுருவங்களும் உள்ளன. 

பொதுவாக ஓர் ஆலயத்தில் மைய சன்னிதியைச் சுற்றி பல கடவுளருக்கும் தனித்தனி சன்னிதிகள் இருப்பது சகஜம்தான்.  ஆனால் அப்படிப்பட்ட ஒவ்வொரு சன்னிதிக்கும் மிக உயரமான ஓர் விமான கோபுரமும் இருப்பது லிங்கராஜர் கோயிலில்தான் சாத்தியமோ?

வெளிப் பிரகாரத்தில் இப்படித் திரும்பினால் சாவித்ரி மாதாவுக்கு ஒரு சன்னிதி. அப்படிப் பார்த்தால் அருகிலேயே ஜமராஜாவுக்கு (எமதர்மன்தான்) இன்னொரு சன்னிதி. சத்தியவானுக்கு சன்னிதி இல்லை.

விமானம் அற்ற தாரிணி தேவி

தாரிணி தேவிக்கு மட்டும் தனி விமானம் கிடையாது. அவர் மரத்தின் கீழேதான் காட்சியளிக்கிறார். ஆனால் பக்தர்கள் இங்கு விசேஷ கவனிப்பைச் செலுத்துகிறார்கள்.  அதற்கு ஆதாரமாக சுற்றிலும் வைக்கப்பட்டிருக்கும் தேங்காய் வரிசைகள்.  மரக்கிளைகளில் புடவைகள் தொங்குகின்றன. வேண்டுதல் நிறைவேறினால் தேங்காய் காணிக்கையோடு புடவையும் சாத்துவது வழக்கமென்று கூறுகிறார்கள்.

இங்குள்ள எல்லாச் சிலைகளுமே பளிச்சென்ற ஆடைகளுடனும், அழகிய ஆபரணங்களுடனும் காட்சியளிக்கின்றன. திருவுருவங்களுக்கு அலங்காரம் செலுத்துவதில் அதிக ஆர்வம் காட்டப்படுகிறது.

'நல்ல' விஷயம் ஒன்றும் கண்களில் படுகிறது.  அங்கங்கே நிறைய பாம்புகள்.  நிஜப்பாம்புகள் அல்ல. வெண்கலத்தில் படம் விரித்தாடும் பாம்புகள்.  சில சன்னிதிகள் கடவுளர் உருவங்கள் இல்லை.  ஆனால் அங்கும் இப்படிச் சில நாக உருவங்கள்.

ராம்சீதா, சிவகாளி, கார்த்திகேசர், ஏகாம்பரேஸ்வரருக்கு மட்டுமல்ல, நந்திதேவருக்குக் கூட ஒரு தனி சன்னிதி, சற்றே ஆழத்தில் உள்ளது. ஃபெர்குகன் என்ற சிறந்த வரலாற்று ஆய்வாளர், ‘’இந்திய ஆலயங்களில் இது ஒரு மாஸ்டர்பீஸ்’’ என்று வர்ணித்திருக்கிறார்.

ஆலயத்தைக் காணும் மேடை

மொத்த ஆலயத்தையும் அழகான கோணத்தில் காண்பதற்காக எல்லைப்புறச் சுவருக்கு அருகே ஓர் உயர்த்தப்பட்ட மேடை உள்ளது.  இதில் ஏறி நின்று ஒட்டுமொத்த ஆலயத்தையும் காண முடியும்.  இந்துக்கள் மட்டுமே ஆலயத்துக்குள் அனுமதி என்பதால் பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் (வெளிநாட்டினர் உட்பட) இந்த மேடையின் மீது நின்றுகொண்டு ஆலயத்தைக் கண்டு களிக்கிறார்கள். ஒளிப்படக் கருவிகள் ப்ளாஷ்களால் இரைந்து கொண்டிருக்கின்றன. 

இது ஹரியும் ஹரனும் இணைந்த ஆலயமாகும். ஆலயத்துக்குள் நுழையும்போதே ஒரு திரிசூலம் தென்படுகிறது. சிவபெருமானின் சிலை, திருமாலின் சிலை இரண்டுமே நுழைவு வாயிலில் இரண்டு பக்கங்களில் காட்சியளிக்கின்றன.  ஆக லிங்கராஜர் ஆலயம் ஹரி-ஹரன் ஆலயமாகவும் தோற்றமளிக்கிறது

லிங்கராஜர் மிக பிரமாண்டமாக காட்சி தருகிறார். இது ஹரிஹர ரூபம் என்கின்றனர்.  அதாவது திருமாலும் இந்த லிங்கத்தில் உறைந்திருப்பதாக நம்பிக்கை.  அதனால்தான் அர்ச்சனைக்காக விற்கும் பூக்குடலையில் வில்வ தளங்களும் துளசி இலைகளும் சேர்ந்தே காணப்படுகின்றன.

ஆலயம் கட்டி முடிக்கப்படும்போது கலிங்கப் பிராந்தியத்தில் (அதுதான் இன்றைய ஒடிசா) ஜகன்னாதர் பக்தியும் பரவத் தொடங்கியது.  இந்த லிங்கத்திலேயே திருமாலும் எழுந்தருளி இருக்கிறார் என்பதைப் பலரும் ஏற்றுக்கொண்டனர்.  மூலச் சன்னிதியில் திருமாலின் உருவம் இல்லாமலேயே சிவலிங்கத்தை ஹரியும், ஹரனுமாக ஏற்று பக்தர்கள் வணங்குவது சமய இணக்கத்துக்கு ஓர் அடையாளமாகத் திகழ்கிறது.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x