திருச்செந்தூர் மாசி திருவிழாவில் பச்சை சார்த்தி சுவாமி வீதி உலா: தேரோட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழாவில் 8-ம் நாளான நேற்று, சுவாமி சண்முகர் பச்சை சார்த்தி வீதியுலா வந்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழாவில் 8-ம் நாளான நேற்று, சுவாமி சண்முகர் பச்சை சார்த்தி வீதியுலா வந்தார்.
Updated on
1 min read

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழாவின் 8-ம் நாளான நேற்று சுவாமி சண்முகர் பச்சை சார்த்தி கோலத்தில் விஷ்ணு அம்சமாக எழுந்தருளி வீதி உலா வந்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கண் சார்த்தி வழிபட்டனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கடந்த மாதம் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்கச் சப்பரத்தில் சிவப்பு சார்த்திய கோலத்தில் சிவன் அம்சமாக எழுந்தருளி வீதி உலா வந்தார்.

நேற்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. அதிகாலையில், சுவாமி சண்முகர் வெண்பட்டு அணிந்து, வெண்மலர்கள் சூடி, வெள்ளிச் சப்பரத்தில் பிரம்ம அம்சமாக வெள்ளை சார்த்தி கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்து மேலக்கோவில் சேர்ந்தார்.

அங்கு, சுவாமி சண்முகருக்கு அபிஷேகம், அலங்காரமாகி, மகா தீபாராதனை நடைபெற்றது. மதியம் 12.05 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற பட்டு அணிந்து, பச்சை மரிக்கொழுந்து சூடி, பச்சை நிற கடைசல் சப்பரத்தில், பச்சை சார்த்தி கோலத்தில் விஷ்ணு அம்சமாக எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கண் சார்த்தி தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இன்று (11-ம் தேதி) இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது. நாளை (மார்ச் 12) காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரோட்டம் தொடங்குகிறது. முதலில் விநாயகர் தேர், இரண்டாவதாக சுவாமி குமரவிடங்கபெருமான் வள்ளி- தெய்வானையுடன் எழுந்தருளும் பெரிய தேர், மூன்றாவதாக தெய்வானை அம்மன் எழுந்தருளிய தேர் என மூன்று தேர்களை பக்தர்கள் வடம்பிடித்து இழுக்கின்றனர். நாளை மறுநாள் (13-ம் தேதி) இரவு சுவாமி தெப்பத்தில் 11 முறை சுற்றும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரா.அருள்முருகன், இணை ஆணையர் சு.ஞானசேகரன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in