திருப்போரூரில் கந்தசுவாமி கோயில் மாசி பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
திருப்போரூரில் கந்தசுவாமி கோயில் மாசி பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

கந்தசுவாமி கோயிலில் மாசி தேரோட்டம்: பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த திருப்போரூர்

Published on

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயில் மாசி பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ம் நாள் முக்கிய உற்சவமான தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.

காலை 7:00 மணியளவில் உற்சவர் கந்தனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, கந்தபெருமான் சிறப்பு அலங்காரத்தில், கோயிலிலிருந்து தேரடிக்கு `அரோகரா' கோஷத்துடன் பக்தர்கள் வெள்ளத்தில் புறப்பட்டார்.

பின்னர் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் கந்தபெருமான் எழுந்தருளினார். 9:30 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது. தேர் 4 மாடவீதிகள் வழியாகச் சென்று பிற்பகல் 3:00 மணியளவில் தேரடிக்கு வந்தது. தேர் உற்சவத்தை ஒட்டி பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர், பழரசங்கள் வழங்கப்பட்டன.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் குவிந்து கந்தனை பக்திப் பரவசத்துடன் வழிபட்டு சென்றனர். விழா, ஏற்பாடுகளை கந்தசுவாமி கோயில் செயல் அலுவலர் குமரவேல், மேலாளர் வெற்றிவேல் மற்றும் உபயதாரர்கள் குழுவினர் செய்தனர். விழாவில், 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, முக்கிய விழாவாக இன்று மாலை ஆலத்தூர் கிராமத்தில் பரிவேட்டை நிகழ்ச்சியும், 12-ம் தேதி இரவு 7:00 மணிக்கு தெப்ப உற்சவமும், 15-ம் தேதி காலை 7.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in