

நாமக்கல்: நாமக்கல்லில் வரும் 12ம் தேதி நடைபெற உள்ள தெப்பதேர் திருவிழாவை முன்னிட்டு 150 இரும்பு பேரல்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தெப்பத்தேர் கமலாலய குளத்தில் விட்டு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை அமைந்துள்ளது. இம்மலை அடிவாரத்தில் தெற்கு புறத்தில் புாரண கால சிறப்பு மிக்க கமலாலயக்குளம் அமைந்துள்ளது. இக்குளத்தின் ஒரு பகுதியில் ஆஞ்சநேயர் பாத சுவடுகள் உள்ளன. தவிர, நாமக்கல் மலைக்கு மேற்கு புறத்தில் நாமகிரித் தாயார் உடனுரை லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில், அதன் எதிரில் மலையையும் தெய்வங்களையும் வணங்கிய நிலையில் ஆஞ்சநேயர் ஸ்வாமியும், மலையின் கிழக்குப்பகுதியில் அரங்கநாயகித் தாயார் உடனுரை ரங்கநாதர் கோயிலும் அமைந்துள்ளன.
இந்நிலையில், மலையின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள புராண சிறப்பு பெற்ற கமலாலயக்குளத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 12ம் தேதி மாலை தெப்பத்தேர் விழா நடத்தப்பட உள்ளது. இதையொட்டி தெப்பத்தேர் உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். அங்கு தெப்பம் அமைக்கும் தொழிலாளர் சுமார் 6 பேர் நாமக்கல் வந்து கமலாலயக்குளத்தில் கடந்த இரு தினங்களாக தெப்பத்தேர் உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 150 இரும்பு பேரல்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தெப்பத்தேர் நேற்று கமலாலயக் குளத்தில் விட்டு வெள்ளோடம் பார்க்ப்பட்டது. தொடர்ந்து தெப்பத்தேரில் அலங்காரம் நடைபெற்று வருகிறது. வரும் 12ம் தேதி மாலை 5 மணிக்கு ஸ்வாமிகளை தெப்பத்தேரில் வைத்து பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்வர். தொடர்ந்து தெப்பத்தேர் கமலாலயத்தில் உலா வரும். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர். இந்துசமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இளையராஜா, அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி, அறங்காவலர்கள் மல்லிகா, ராமசீனிவாசன், ரமேஷ்பாபு, செல்வசீராளன் ஆகியோர் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.