

ராமேசுவரம்: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேசுவரத்திலிருந்து காசிக்கு செல்லும் முதல் ஆன்மிக பயணக்குழு புதன்கிழமை இரவு ராமேசுவரத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறை சார்பில், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் இருந்து, காசியில் உள்ள விஸ்வநாத சுவாமி கோயிலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள், ஆன்மிகப் பயணமாக ஆண்டு தோறும் அழைத்துச் செல்லப்படுகிறனர். இதற்கான செலவினத் தொகையை அரசே ஏற்கிறது.
அதன்படி, இந்த ஆன்மிகப் பயணத்திற்கு நடப்பாண்டில் அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில், மண்டலத்திற்கு 21 நபர்கள் வீதம் 420 நபர்கள் விண்ணப்பங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட நபர்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு 60 பேர் கொண்ட முதல் குழுவினர் புதன்கிழமை இரவு ராமேசுவரத்திலிருந்து மண்டபம் ரயில் நிலையத்திற்கு பேருந்தில் புறப்பட்டுச் சென்றனர். ராமநாதசுவாமி கோயில் துணை ஆணையர் சிவராம்குமார் தலைமையில் வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து, இந்த ஆன்மிகப் பயணக் குழுவினர் மண்டபம் ரயில் ரயில் மூலம் காசி புறப்பட்டுச் சென்றனர். மேலும் 360 பேர்கள் அடுத்த மூன்று கட்டமாக காசி செல்வார்கள், என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.