

கோவை: கோவையின் காவல் தெய்வமான, கோனியம்மன் கோயிலின் தேரோட்டத் திருவிழா இன்று (மார்ச் 5) நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவையின் காவல் தெய்வமான, பெரியகடை வீதியில் அமைந்துள்ள, கோனியம்மன் கோயிலின் தேரோட்டத் திருவிழா கடந்த மாதம் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று மாலை கொடியேற்றம் மற்றும் அக்னிச்சாட்டு ஆகியவை நடந்தது. அன்றைய தினத்திலிருந்து தினமும் அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் ஆகியவை நடத்தப்பட்டன. தொடர்ந்து தினமும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாகனத்தில் சுவாமியின் திருவீதி உலா நிகழ்வுகள் நடந்தன. திருவிழாவின் ஒரு பகுதியாக அம்மனுக்கு திருக்கல்யாணம் நேற்று (மார்ச் 4) நடந்தது. அதன் தொடர்ச்சியாக விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நிகழ்வு இன்று (மார்ச் 5) நடந்தது. இதையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், காலை 5 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார்.
பின்னர், சிறப்புப் பூஜைகளுக்கு பிறகு, இன்று பகல் 2.05 மணிக்கு ராஜவீதியில் உள்ள தேர்முட்டி திடலில் இருந்து திருத்தேரோட்டம் தொடங்கியது. பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் ஆகியோர் தலைமை வகித்து திருத்தேரோட்டத்தை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். இதில், பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன், திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ராஜவீதி தேர்நிலைத் திடலில் இருந்து தொடங்கிய தேரோட்டம், ராஜவீதி சந்திப்பு அருகே வலதுபுறம் திரும்பி, ஒப்பணக்கார வீதி வழியாகச் சென்று வைசியாள் வீதி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி ராஜவீதியை அடைந்து மீண்டும் இன்று மாலை 6.20 மணிக்கு தனது நிலைக்கு திரும்பியது. தேரோட்டத்தின் போது, வழிநெடுகிலும் சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து சுவாமியை வழிபட்டனர். மேலும், கடைவீதி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தஜோதிக்கு, கோயில் நிர்வாகத்தின் சார்பில் பரிவட்டம் கட்டப்பட்டது.
தேரோட்டத் திருவிழாவில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தையொட்டி, மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் தலைமையில் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் என ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தேரோட்டத்தைத் தொடர்ந்து நாளை மறுநாள் (7-ம் தேதி) தெப்பத் திருவிழா, வரும் 8-ம் தேதி தீர்த்தவாரி, தரிசனம், கொடியிறக்கம் ஆகியவை நடக்கிறது. வரும் 10-ம் தேதி வசந்தவிழாவுடன் தேரோட்ட திருவிழா நிறைவு பெறுகிறது.