

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில், கடந்த 26-ம் தேதி கொடியோற்றத்துடன் விழா தொடங்கியது. 27-ம் தேதி மயானக் கொள்ளையும், மார்ச் 2-ம் தேதி தீ மிதி திருவிழாவும் நடைபெற்றது.
இவ்விழாவின் ஏழாம் நாள் திருவிழாவான தேர் திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. இதை முன்னிட்டு மூலவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. இதையடுத்து உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பலவித மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. பின்னர் மதியம் 2.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.
இதையடுத்து மேளம் தாளம் முழங்க அம்மன் கோயில் மண்டபத்தில் இருந்து வந்து தேரில் எழுந்தருள, மாலை 4.30 மணிக்கு தேருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
இத்தேரோட்டத்தில் விழுப்பரம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், எம்எல்ஏக்கள் செஞ்சி மஸ்தான், விக்கிரவாண்டி அன்னியூர் சிவா, மயிலம் சிவக்குமார், ஆரணி எம்.பி. தரணி வேந்தன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பழனி, ஒன்றியக்குழு தலைவர்கள் மேல்மலையனூர் கண்மணி நெடுஞ்செழியன், செஞ்சி விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இத்தேரோட்ட திருநிகழ்வில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் விழுப்புரம் டிஐஜி திஷா மித்தல், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.