

புதுச்சேரி: புதுச்சேரியில் மாசிமக திருவிழாவையொட்டி முக்கியப் பகுதிகளிலிருந்து கூடுதல் பேருந்துகளை இயக்கவும், சிசிடிவி பொருத்திக் கண்காணிக்கவும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அனுமதி பெற்றே பேனர் வைக்க வேண்டும். அனுமதி இல்லாவிட்டால் அவற்றை அகற்றவும் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசிமகத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். மாசி மகத்தில் புதுச்சேரி கடற்கரை, நதி உள்ளிட்ட நீர்நிலைகளில் புதுச்சேரி மட்டுமல்லாது தமிழகப் பகுதிகளிலிருந்தும் திருக்கோயில்களின் உற்சவர்கள் எழுந்தருளித் தீர்த்தமாடி அருள்பாலிக்கும் விழா புதுவை மாநிலத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் தமிழ் மாதமான மாசியில் நடைபெறும் இத்திருவிழா வரும் 12-ஆம் தேதி திருக்காஞ்சியில் தொடங்குகிறது. அதையடுத்து வரும் 14-ம் தேதி புதுச்சேரி வைத்திக்குப்பம், வீராம்பட்டிணம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன.
இதையொட்டி வரும் 14-ம் தேதி விடுமுறையை அரசு அறிவித்துள்ளது. மாசி மகத் திருவிழாவுக்கான ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் வழுதாவூர் சாலையில் உள்ள ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் காவல்துறை,வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் மாசிமகம் ஏற்பாடுகள் பற்றி ஆட்சியர் குலோத்துங்கன் பேசியது: “மாசிமகத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறை மேற்கொள்ளவேண்டும். தடுப்புகள் அமைத்து அனைத்துத் தரப்பு மக்களும் எளிதில் சுவாமி தரிசனம் செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறை அதிகாரிகள் எடுப்பது அவசியம். தீர்த்தவாரி முடிந்ததும் மக்கள் கடலில் நீராடுவது வழக்கம். ஆகவே, கடலில் குளிப்பவர்கள் பாதுகாப்புடன் இருப்பதற்கு காவல்துறை தீவிரமாகக் கண்காணிக்கவேண்டும்.
மாசி மகம் நடைபெறும் பகுதிகளில் பொதுப்பணித் துறையினர் சாலையில் உள்ள சிறிய பழுதுகளைக் கூட சீர்படுத்தவேண்டும். சாலையோரம் உள்ள மரக்கிளைகள் சுவாமி எழுந்தருள்வதற்கு இடையூறாக இருந்தால் அவற்றை அகற்றவேண்டும்.அதேபோல, தாழ்வாகச் செல்லும் மின்சார வயர்களையும் சீர்படுத்தவேண்டும். மக்கள் கூடும் பகுதிகளில் தற்காலிகமான கழிப்பறை வசதிகள் நகராட்சி நிர்வாகத்தால் ஏற்படுத்தப்படவேண்டும்.
முக்கிய பகுதிகளிலிருந்து மாசி மகம் நடைபெறும் பகுதிகளுக்குக் கூடுதல் பேருந்துகள் இயக்கவேண்டும். மக்களுக்கான குடிநீர் வசதிகள் ஏற்படுத்தவேண்டும். சுகாதாரத் துறையினர் மருத்துவ முகாம்கள் அமைத்து பரிசோதனை மேற்கொள்வது அவசியம். தீயணைப்புத்துறையினர் மற்றும் அவசர ஆம்புலன்ஸ் சேவை மாசி மகம் நடைபெறும் இடங்களில் முகாமிட்டு தயார்நிலையில் இருப்பது அவசியம். சிசிடிவி பொருத்திக் கண்காணிக்க வேண்டும். திருவிழாவுக்காக ஆணையர்கள் அனுமதி பெற்று
பதாகைகள் வைக்க அறிவுறுத்தவேண்டும். அனுமதியற்ற விளம்பரப் பதாகைகள் அகற்றப்படவேண்டும்” என்று தெரிவித்தார்.