

சென்னை: தங்கசாலையில் உள்ள 100 ஆண்டு பழமை வாய்ந்த ராமர் கோயிலில் ரூ.26.43 லட்சம் செலவில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சென்னை தங்கசாலை அல்லூரி வெங்கடாத்திரி சுவாமி மடம் என்ற ராமர் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தங்கசாலை அல்லூரி வெங்கடாத்திரி சுவாமி மடம் என்ற ராமர் கோயில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். கடந்த 2004-ம் ஆண்டு இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
ரூ.26.43 லட்சம் செலவில்.. இந்நிலையில், இக்கோயிலுக்கு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்திட ரூ.26.43 லட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில், கோயிலுக்கு அனைத்து சன்னதிகளுக்கும் வர்ணம் பூசுதல், கருங்கல் தரைதளம் அமைத்தல், சொருவோடு பதித்தல் மற்றும் மடப்பள்ளி பழுதுபார்த்தல் பணிகள் ரூ.12.65 லட்சம் செலவிலும், கோயிலின் தரைதளத்தில் பழுதுபார்க்கும் பணி ரூ.1.98 லட்சம் செலவிலும், முன்னேற்றபணி ரூ.11.80 லட்சம் செலவிலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 20 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த தற்போது வரை 2,634 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளன. இன்று மட்டும் தஞ்சாவூர் மாவட்டம் புதுசத்திரம் காளியம்மன் கோயில், கோவை மாவட்டம் சரவணம்பட்டி ரத்தினகிரி மருதாசலக் கடவுள் கோயில், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில் என 14 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.