

இஸ்லாமிய ஆண்டின் ஒன்பதாவது மாதம் ரமலான். இந்த அரபிச் சொல்லுக்கு ‘கரித்தல்’ என்று பொருள். நல்லடியார்களின் பாவங்கள் இம்மாதத்தில் கரிக்கப்படுவதால், இப்பெயர் பெற்றுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கி, அது விரைவில் வந்தடைவதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே இறைவனிடம் பிரார்த்திப்பார்கள். (நூல்: பைஹகி).
ரமலான் மாதத்தின் சிறப்புகள்: ரமலான் மாதத்தில்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு, இறை மறையான திருகுர்ஆன் அருளப்பட்டது. ரமலான் மாதம் எத்தகையதென்றால், அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், மேலும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான குர்ஆன் இறக்கியருளப்பட் டது. எனவே இனி உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். (அல்குர்ஆன்: 2:185)
‘அல்குர்ஆன்’ எனும் அரபிச்சொல்லுக்கு ‘ஓதப்படக்கூடியது’ என்று பொருள். அது 114 அத்தியாயங்களையும், 6666 வசனங்களையும் கொண்டது. 30 பாகங்களாக அமைக்கப் பெற்றுள்ளது. முஸ்லிம்கள், ஏனைய மாதங்களைவிட இம் மாதத்தில் இதனை மிக அதிகம் ஓதி வருகின்றனர்.
ரமலான் நோன்பு: இஸ்லாமிய மார்க்கத்தின் 5 கடமைகளில் ஒன்றான நோன்பை இம்மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோற்க வேண்டுமென குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. ‘நோன்பானது எனக்காகவே வைக்கப்படுகிறது அதற்கு நானே கூலி வழங்குவேன்’ என்று இறைவன் தன்னை முற்படுத்திக் கூறியுள்ளான். (நூல்: திர்மதி) இதிலிருந்து நோன்பு கடமையாக்கப்பட்டுள்ள இம்மாதத்தின் சிறப்பினை அறிந்து கொள்கிறோம்.
உங்களில் எவர் (ரமலான்) மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். ஆனால் எவரேனும் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால், அவர் மற்ற நாட்களில் கணக்கிட்டு நோன்பு நோற்றிட வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவை விரும்புகின்றான். அவன் உங்களுக்குக் கஷ்டத்தைத் தர விரும்பவில்லை. (அல்குர்ஆன்: 2:185).
மேலும் இம்மாதத்தில்தான் ‘லைலத்துல் கத்ர்’ எனும் ஓர் இரவு உள்ளது. இந்த அரபிச் சொல்லுக்கு ‘கண்ணியம் பொருந்திய இரவு’ என்பது பொருள். சிறப்புக்குரிய இந்த இரவு, ரமலான் மாதத்தின் இறுதி பத்து நாட்களில் ஓர் ஒற்றைப்படை இரவாகும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். சிறப்பு வணக்க வழிபாடுகள் இந்த இரவுகளில் அதிகம் நடைபெறும், அல்குர்ஆன் அருளப்பட்ட இந்த இரவு ஆயிரம் மாதங்களைவிட சிறந்தது. இந்த இரவில்தான், வானவர் ஜிப்ரயில் (அலை) மற்ற வானவர்களுடன் இறையருளைச் சுமந்தவராக பூமிக்கு வருகை தருவார் என்றும் அல்குர்ஆன் (97: 14) கூறுகிறது.
இப்புனித ரமலான் மாதத்தில் முழுமையாக அனைத்து நோன்புகளையும் நோற்று, அருள்மறையை அதிகமாக ஓதி, நிறைய வணக்க வழிபாடுகளை புரிந்து, ஏழைகளுக்கு தர்மம் செய்து, நிறைவான இறையருளை பெறக் கூடிய பாக்கியத்தை நம் அனைவருக்கும் இறைவன் வழங்குவானாக!
ஆமீன்!
கட்டுரையாளர்: மவ்லானா அல்ஹாஜ் முனைவர் M.சையது மசூது ஜமாலி (தமிழ்நாடு அரசு காஜி, காஞ்சிபுரம் மாவட்டம்)