Last Updated : 12 Jul, 2018 10:18 AM

 

Published : 12 Jul 2018 10:18 AM
Last Updated : 12 Jul 2018 10:18 AM

ஆன்மிக நூலகம்: பிரம்மமும் உப்பைப் போல் பரவியிருக்கிறது

த்தாலகர் என்றொரு முனிவர். உபநிடதங்கள் யாவும் கற்றுணர்ந்த உத்தமர். அவருக்கு சுவேதகேது என்றொரு மகன். தன் தந்தையே ஆசானாக இருந்து தனக்குக் கல்வியோடு ஞானம் புகட்ட வேண்டுமென மகன் விரும்பினான்.

ஆனால், குரு வழியாக அதற்குரிய நியதிகளுடன் மகனுக்கு உபதேசம் அளிக்கப்பட வேண்டுமென்று உத்தாலகர் விரும்பினார். அன்பின் மேலீட்டால், தானே தன் மகனுக்குக் கற்பிக்கும்போது உரிய கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க முடியாது என்று உத்தாலகர் எண்ணினார்.

சுவேதகேது இதைத் தவறாக எடுத்துக்கொண்டான். தன் தந்தைக்குப் போதிய கல்வியறிவு இல்லாததால்தான் இன்னொருவரிடம் தன்னைப் படிக்க அனுப்புகிறார் என்று அவன் நினைத்துக்கொண்டான்.

ஆகையால் தான் கற்றறிந்த பின்பு தன் தந்தையைவிட மிகுந்த அறிவாளியாகிவிடுவோம் என்று அவன் எண்ணினான். காரணம் தெரிந்து கொள்ளாததால், சுவேதகேதுவுக்குத் திறமையைவிடக் கர்வமே தலைதூக்கியது.

சில ஆண்டுகள் பயிற்சிக்குப் பின் சுவேதகேது தன் தந்தையின் ஆசிரமத்துக்குத் திரும்பினான். அவனது மனநிலையை உள்ளபடி உத்தாலகர் புரிந்துகொண்டார். முழுமையடையாத அவன் அறிவின் முதிர்ச்சியின்மையை அவனுக்குத் தெளிவுபடுத்த வேண்டுமென்று முடிவெடுத்தார்.

“பிரம்மம் என்பது என்ன? அதைப் பற்றி நீ என்ன தெரிந்து கொண்டாய்? எப்படி அதை உணருவது? ஞானம் தானே நிறைவதற்கு எதை உணர்ந்துகொள்ள வேண்டும்?”

உத்தாலகரின் இந்தக் கேள்விகளைக் கேட்டு மகன் அதிர்ச்சியடைந்தான்.

“சுவேதகேது! ஒரு பாத்திரத்தில் நீரைக் கொண்டுவா” என்றார். “உள்ளே போய் ஒரு பிடி உப்புக் கொண்டுவா” என்றார்.

“இந்த உப்பை அந்தப் பாத்திரத்திலுள்ள நீரில் போட்டுக் கலந்து வை”. கலந்து வைத்தான் சுவேதகேது.

“நீ உப்பைக் கொண்டு வந்து இந்த நீரில் போட்டாய். இப்போது அந்த உப்பு பாத்திரத்தில் எங்கே இருக்கிறது? என்று கேட்டார் உத்தாலகர்.

சுவேதகேது பாத்திரத்தில் கையை விட்டுத் துழாவிப் பார்த்தான். ஆனால், அவனால் உப்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த உப்பு என்ன ஆயிற்று என்று அவனால் தெரிந்துகொள்ள முடியவில்லை.

உத்தாலகர் மகனை அழைத்து அவன் வாயைத் திறக்கச் சொன்னார். நாக்கை நீட்டச் சொல்லி அதன்மீது சில சொட்டுக்கள் விட்டார்.

உடனே சுவேதகேது, “தந்தையே, உப்பு இந்த நீரில் இருக்கிறது” என்றான்.

“அப்படியானால் இந்தப் பாத்திரத்தின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் நீரை எடுத்து நீ ருசித்துப் பார்த்து எப்படி இருக்கிறதெனச் சொல்” என்றார் உத்தாலகர்.

அப்படியே சுவைத்துப் பார்த்த மகன், “தந்தையே! உப்பு இந்த நீர் முழுவதுமே பரவி ஒரேமாதிரி கரிப்பு ருசியுடன்தான் இருக்கிறது. குறிப்பிட்ட எந்த இடத்தில் உப்பு இருக்கிறது என்று என்னால் சொல்ல முடியவில்லை” என்றான். உத்தாலகர் புன்னகைத்தார்.

“பரப்பிரும்மத்தின் தத்துவம் இதுதான் மகனே! உப்பு இந்த நீர் முழுவதும் நிறைந்துள்ளது. அதைப் போல் பிரும்மனும் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறார். உப்பை நீ தனியாகப் பார்க்க முடியாதது போல் அவரையும் தனியாகப் பார்க்க முடியாது.” என்று கூறி முடித்தார், உத்தாலகர்.

சொல்லில் இருக்கிறார்கள்

மதிஒளி, கங்கை புத்தக நிலையம்

23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை - 17

தொலைபேசி : 044- 24342810, விலை : ₹55/-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x