

சிவராத்திரியை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் 12 சிவாலய ஓட்டம் நேற்று தொடங்கியது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 110 கி.மீ. தொலைவு பக்தர்கள் ஓடிச் சென்று 12 சிவாலயங்களை தரிசிக்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு, கல்குளம் தாலுகா பகுதிகளில் 12 சிவதலங்கள் அமைந்துள்ளன. சிவராத்திரியை முன்னிட்டு 12 சிவாலயங்களையும் ஓடிச்சென்று தரிசிக்கும் `சிவாலய ஓட்டம்' திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் இருந்தே பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.
சிவராத்திரிக்கு 7 நாட்களுக்கு முன்பு மாலை அணியும் பக்தர்கள் நோன்பு இருப்பது வழக்கம். சிவராத்திரிக்கு முந்தைய தினமான நேற்று 12 சிவாலயங்களில் முதல் கோயிலான முஞ்சிறை திருமலை மகாதேவர் கோயிலில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவாலய ஓட்டத்தை தொடங்கினர். நேற்று மதியத்தில் இருந்து பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.
தொடர்ந்து, திக்குறிச்சி மகாதேவர் கோயில், திற்பரப்பு வீரபத்திரர் கோயில், திருநந்திக்கரை கோயில், பொன்மனை மகாதேவர் கோயில், பன்னிப்பாகம் கோயில், கல்குளம் நீலகண்டசுவாமி கோயில், மேலாங்கோடு கோயில், திருவிடைக்கோடு சடையப்பர் கோயில், திருவிதாங்கோடு கோயில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோயில், திருநட்டாலம் சங்கரநாராயணர் கோயில் ஆகிய கோயில்களை ஓடிச்சென்று பக்தர்கள் தரிசிக்கின்றனர். இன்று சிவாலய ஓட்டம் நிறைவடையும் நட்டாலம் கோயிலில், இரவு முழுவதும் கண்விழித்து சிவராத்திரி பூஜையில் பங்கேற்பார்கள்.
சுமார் 110 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள 12 சிவாலயங்களையும் ஓடி தரிசிக்கும் பக்தர்களுக்கு, வழிநெடுகிலும் பொதுமக்கள் சுக்கு நீர், கடலை, பானகம், மோர், கஞ்சி, பழம், இளநீர், நுங்கு போன்றவற்றை வழங்கி வருகின்றனர். இதுதவிர, முதியோர் 12 சிவாலயங்களை வாகனங்களில் சென்று தரிசிக்கின்றனர். சிவாலய ஓட்டம் மற்றும் சிவராத்திரி விழாவையொட்டி குமரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.