

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள சிரவணபெளிகுளா சமணர்களின் முக்கிய வழிப்பாட்டுத் தலமாகும். இங்கு விந்தியகிரி, சந்திரகிரி எனும் இரு மலைகள் உள்ளன. விந்தயகிரியில் உலகப் புகழ் பெற்ற பகவான் பாகுபலி சிலை உள்ளது. இந்த மலைக்கு எதிரே இருப்பதுதான் சந்திரகிரி. இது கடல் மட்டத்திலிருந்து 3052 அடி உயரமுள்ளது. மலையின் மீதேற சுமார் 400 படிகளுள்ளன. இம்மலை பல வரலாற்றுச் சின்னங்களைக் கொண்டுள்ளது.
மௌரிய சாம்ராஜ்யத்தை நிறுவி, சாணக்கியர், மெகஸ்தனிஸ் போன்றோர்களால் போற்றப்பட்டு, சரித்திரத்தில் பொற்கால ஆட்சியைத் தந்த மாமன்னர் சந்திரகுப்தர், உஜ்ஜயினி நகரத்திற்கு ஜைன மகாமுனிவர் பத்திரபாகு வந்துள்ளதை அறிந்தார். அவரிடம் ஆசிபெற மன்னர் சென்றார். மாமுனிவரும் மாமன்னருக்கு ஆசி வழங்கினார். அத்துடன் சந்திரகுப்தனின் நாட்டில் பன்னிரண்டு ஆண்டுகளுக்குக் கடும் பஞ்சம் ஏற்படப் போவதையும் கணித்துக் கூறினார்.
இச்செய்தியைக் கேட்ட சந்திரகுப்த மௌரியர் மனம் வருந்தி இல்வாழ்க்கையில் வெறுப்புற்றுத் துறவி ஆனார். பன்னிரண்டாயிரம் பேர் கொண்ட முனிசங்கத்தாரோடு பேரரசத்துறவி சந்திரகுப்தர் சிரவண பெளிகுளம் வந்தார். பத்திரபாகு முனிவரின் சிறந்த பக்தனாக, சீடனாக அங்கேயே குகையில் தங்கித் தவமிருந்து, வாழ்வின் இறுதி நாட்களில் வடக்கிருந்து உயிர் நீத்தார். ஒரு மாமன்னர் துறவியாகித் தன் கைப்படவே பொறித்த கல்வெட்டுகள் சந்திரகிரியில் காணப்படுகின்றன. அம்மலையும் சந்திரகுப்தர் பெயராலேயே சந்திரகிரி என அழைக்கப்படுகிறது. பத்திரபாகு முனிவர் மற்றும் சந்திரகுப்தரின் பாதங்கள் இங்கு உள்ளன. சந்திரகுப்தரைக் காண வந்த அவரது பேரன் சாம்ராட் அசோகர், பெளிகுளம் நகரை உருவாக்கினார்.
இம்மலை கல்வெட்டுக் களஞ்சியமாகத் திகழ்கிறது. கல்வெட்டுகள் ஜைன அறத்தைப் பறைச்சாற்றுகின்றன. சோழர், பல்லவர், ஹொய்சாலர், கதம்பர், கொங்கால்வர், நிண்டகுலர், சங்கல்வர், மைசூர் மன்னர்கள் மற்றும் விஜயநகரப் பேரரசு பற்றிய செய்திகள் இக் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன.
மேலும் மலையின் மீது பதினான்கு ஆலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றின் பெயர் சந்திரகுப்தர் ஆலயம். ஆலயத்தின் உட்புறம் பேரரசத் துறவி சந்திரகுப்தர், குரு சுருதக்கேவலி பத்ரபாகு ஆகியோரின் வாழ்க்கை நிகழ்வுகள் கற்சிலைகளில் வடிக்கப்பட்டுள்ளன. மற்ற ஆலயங்கள் பார்சுவநாதர், கத்தலே (இருண்ட), சாந்திநாதர், சுபார்சுவநாதர், சந்திரப்பிரபர், சாமுண்டராய, சாசன, மஜ்ஜிகண்ண, எரடுகட்ட, சுவாதிகந்தவாரண, தேர், மற்றும் சாந்திஸ்வர ஆலயங்களாகும். பரதேஸ்வரர் சிலை மலையின் மேற்குப் புறத்தில் காணப்படுகிறது.
சரஸ்வதி தீர்த்தமாகக் கருதப்படும் இம்மலையை நன்கு ஆய்ந்து வெளியிட்ட ஆங்கிலேயர் ராய்ஸ், டாக்டர் வியுமேன், டாக்டர் ஹார்னலே, ஸ்மித் மற்றும் ராவ்பகதூர் நரசிம்மாச்சாரி ஆகியோர் போற்றப்பட வேண்டியவர்கள்.