

ராமேசுவரம் / திருச்சி / ஈரோடு: தை அமாவாசையையொட்டி ராமேசுவரம், ஸ்ரீரங்கம், பவானி உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளில் லட்சக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடினர்.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் நேற்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பகல் 12 மணியளவில் அக்னி தீர்த்தக் கடற்கரையில் ராமர், சீதா, லட்சுமணர் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கி அருள்பாலித்தனர். மாலையில் மண்டகப்படியில் தீபாராதனை, இரவு கருட வாகனத்தில் சுவாமி, அம்பாள் புறப்பாடு நடைபெற்றது.
22 தீர்த்தங்களில் நீராடி... தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அக்னி தீர்த்தக் கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து, ராமநாத சுவாமி கோயிலில் 22 தீர்த்தங்களில் நீராடி, சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.
இதையொட்டி, 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ராமேசுவரத்துக்கு நேற்று சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
காவிரி படித்துறையில்... ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரிப் படித்துறையில் நேற்று அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கானோர் ஆற்றில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர், அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கூடுதுறையில் வழிபாடு: ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் நேற்று ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி, முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். பின்னர், அங்குள்ள கோயிலில் சங்கமேஸ்வரரை வழிபட்டனர். இதையொட்டி 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதேபோல, மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.