

ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில், 75 அடி உயர கொடி மரத்தில் சிம்ம வாகன கொடி ஏற்றப்பட்டுள்ளது.
ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா இன்று அமாவாசை தினத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதற்காக நேற்று முன்தினம் சர்க்கார்பதி வனப்பகுதியில் இருந்து 75 அடி உயரம் உள்ள கொடிமரம் மாசாணியம்மன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை உப்பாற்றில் கொடி மரத்துக்கு பூஜைகள் செய்யப்பட்டு ஆனைமலையில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் தோளில் சுமந்து வந்தனர். மாசாணியம்மன் கோயிலை கொடிமரம் வந்தடைந்தது பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், 75 அடி உயரமுள்ள கொடிமரத்தில் சிம்ம வாகன கொடி கட்டப்பட்டு, ‘மாசாணி தாயே போற்றி’ என்ற பக்தர்களின் சரண கோஷத்துடன் கொடியேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், பொள்ளாச்சி எம்எல்ஏ ஜெயராமன், ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்க குமார் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். வரும் பிப்ரவரி 11 -ம் தேதி மயான பூஜையும், பிப்ரவரி 14-ம் தேதி குண்டம் இறங்கும் விழா நடைபெற உள்ளது.