

கோவை: மருதமலை முருகன் கோயிலில் தைப்பூசத் தேர்த் திருவிழா வரும் 4-ம் தேதி தொடங்குகிறது. வரும் 11-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
கோவை மருதமலை முருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் தேர்த் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும். அதன்படி, நடப்பாண்டுக்கான தைப்பூசத் திருத்தேர் திருவிழா வரும் பிப்ரவரி 4-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் விநாயகர் பூஜை, வாஸ்துசாந்தி பூஜை ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து மறுநாள் 5-ம் தேதி காலை கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. 6-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை தினமும் அபிஷேக பூஜை, சிறப்பு தீபாராதனை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
வரும் 10-ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. அன்றைய தினம் மதியம் 12.10 மணி முதல் 12.30 மணிக்குள் வள்ளி, தெய்வானை உடனமர் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. பின்னர், சிறப்பு பூஜை, தீபாராதனை, கண்ணாடி மஞ்சத்தில் சுவாமி திருவீதி உலா ஆகியவை நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நிகழ்வு வரும் பிப்ரவரி 11-ம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 4 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற உள்ளன. காலை 5 மணிக்கு உற்சவருக்கு அபிஷேக பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது.
தொடர்ந்து வெள்ளை யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா எழுந்து வருகிறார். காலை 11 மணிக்கு திருத்தேரோட்டம் வடம் பிடித்து தொடங்கி வைக்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு சுவாமி தேரில் இருந்து இறங்குகிறார். தொடர்ந்து யாகசாலை பூஜை, அபிஷேக பூஜை, தீபாராதனை ஆகியவை நடக்கிறது.
தேரோட்ட நிகழ்வில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.
வரும் 13-ம் தேதி கொடியிறக்குதல் நிகழ்வு நடக்கிறது. 14-ம் தேதி வசந்த உற்சவம் நடக்கிறது. விழா நடக்கும் ஒவ்வொரு நாளும், சுவாமி ஒவ்வொரு வாகனத்தில் திருவீதி உலா வருகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். திருவிழாவையொட்டி மாநகர காவல்துறையின் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு உள்ளன.