

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் வேடுபறி வைபவம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் டிச. 30-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. கடந்த 31-ம் தேதி முதல் ஜன. 9-ம் தேதி வரை நடைபெற்ற பகல்பத்து உற்சவ நாட்களில், கோயிலின் 2-ம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. அன்று முதல் ராப்பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது. ராப்பத்து உற்சவத்தின் 8-ம் திருநாளான நேற்று வேடுபறி உற்சவம் நடைபெற்றது. இதற்காக, மாலை 5 மணியளவில் தங்கக் குதிரை வாகனத்தில் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்ட உற்சவர் நம்பெருமாள், ஆரியபடாள் வாயில் வழியாக கோயில் மணல்வெளிக்கு வந்து, குதிரை வாகனத்தில் ஓடியாடி, வையாளி வகையறா கண்டருளினார். பின்னர், திருமங்கை மன்னனை ஆட்கொண்ட வேடுபறி வைபவத்தை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு தரிசித்தனர்.
பின்னர், நம்பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபம் சென்றடைந்தார். அங்கு அரையர் சேவையுடன், பொதுஜன சேவை நடைபெற்றது. அங்கிருந்து நம்பெருமாள் இரவு 11 மணிக்குப் புறப்பட்டு, வீணை வாத்தியத்துடன் நள்ளிரவு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
முன்னதாக, திருமங்கை மன்னன் மரபில் வந்தவர்கள் என்று கூறப்படும் ஸ்ரீரங்கம் தெப்பக்குளத் தெரு காவல்காரர் குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.
வேடுபறி உற்சவம் ஏன்? - திருமாலுக்குத் தொண்டு செய்தே தனது செல்வத்தை இழந்த திருமங்கை மன்னன், தனது பெருமாள் தொண்டு தொடர வழிப்பறிக் கொள்ளையராக மாறினார். இவரை தடுத்தாட்கொள்ள விரும்பிய பெருமாள், மணமகன் வேடத்தில் மகாலட்சுமியுடன் பெருமாள் வீதி வலம் வந்தார். அப்போது அவர் பெருமாள் என்பதை அறியாமல், அவர் காலில் அணிந்திருந்த நகையை திருமங்கைமன்னன் கழற்ற முயன்றும் முடியவில்லை. இதனால், அவர் பல்லால் கடித்து கால் மெட்டியை க்கழற்ற முயன்றபோது, தான் வழிப்பறி செய்துகொண்டு இருப்பது பெருமாளிடம் என்பதை உணர்ந்து, திருமங்கை மன்னன் பெருமாளிடம் சரணாகதியடைந்தார்.
அப்போது, ஓம் நமோ நாராயணா எனும் மந்திரத்தை அவரது காதில் உபதேசித்து, திருமங்கை மன்னனை தனது ஆழ்வாராய் பெருமாள் ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்வே வேடுபறி உற்சவமாக வைகுண்ட ஏகாதசி நிகழ்வில் நடைபெற்று வருகிறது.