

மனுஷ வேஷம் பிரமாதமாய்ப் போட்டவர் ராமன். சீதையை ராவணன் கொண்டு போய் எங்கே வைத்திருக்கிறான் என்று தெரியாத மாதிரியே நடித்தார். சொல்ல முடியாத துக்கப்பட்டார். அப்போது அவள் இருக்கிற இடத்தைக் கண்டுபிடித்துச் சொல்லி அவருக்கு உற்சாகமும் தெம்பும் பலமும் தந்தது யார் என்றால் ஆஞ்சநேய ஸ்வாமிதான்.
சீதையைப் பிரிந்து இவர் பட்ட துக்கத்தைவிட இவரைப் பிரிந்து சீதை பட்ட துக்கம் கோடி மடங்கு. ப்ரிய பத்தினி பக்கத்தில் இல்லையே, தன்னைப் பிரிந்து அவள் கஷ்டப்படுவாளே என்ற கஷ்டம் மட்டுந்தான் ராமருக்கு. ஆனால், அவளுக்கோ இதோடு ராக்ஷஸ ராஜ்யத்தில் சிறைவைக்கப்பட்டிருப்பதான மஹா கஷ்டமும் சேர்ந்திருந்தது. ‘அபலா’ என்றே ஸ்திரீக்குப் பெயர். சாக்ஷாத் ஜகன்மாதாவான மஹாலக்ஷ்மி சீதையாக வந்து அபலையிலும் அபலையாக அசோகவனத்தில் படாத கஷ்டப்பட்டு, அந்தக் கஷ்டத்துக்கு முடிவு ப்ராணனை விடுவதுதான் என்று சுருக்குப் போட்டுக்கொள்ள இருந்தபோது அவளுக்கு உற்சாகத்தை, தெம்பை, பலத்தைத் தந்தது – ஆஞ்சநேயர்தான்.
அஞ்ஜாநாநந்தனம் வீரம் ஜானகீ சோக நாசநம்
அஞ்சனை என்று யாரோ ஒரு வானர ஸ்த்ரீக்குப் புத்திரராய் அவதாரம் பண்ணி அவளுக்கு ஆனந்தம் கொடுத்தார். இது பெரிதில்லை. எந்தப் பிள்ளை, அவன் என்ன துஷ்டத்தனம் செய்பவனாயிருந்தாலும், அம்மாவுக்கு மாத்திரம் ஆனந்தம் தருகிறவனாகத்தான் தோன்றுவான். அதனால்தான் பிள்ளையை ‘நந்தனன்' என்பது.
தசரத நந்தனன், தேவகி நந்தனன் மாதிரி அஞ்ஜநாநந்தனன். இது பெரிசில்லை. அந்த அம்மாவுக்கு மாத்திரமில்லாமல் லோகஜனனிக்கு, லோகமுள்ளளவும் வரப்போகிற அத்தனைஅம்மாகளுக்கும் ஐடியலாக இருக்கும் சீதம்மாவுக்கு மகத்தான சோகம் ஏற்பட்டபோது அதைப் போக்கினாரே, அதற்குத்தான் நாம் அவருக்கு நமஸ்காரம் பண்ணிக் கொண்டேயிருக்கணும்.
சீதையின் சோகாக்னி அது
சீதைக்குள் சோகாக்னி ஜ்வாலை விட்டுக் கொண்டிருந்தது. அவளுடைய ஜீவனை வற்றப் பண்ணிக் கொண்டிருந்தது. ராவணன், ஹனுமார் வாலில் நெருப்பு வைத்ததாகச் சொல்கிறார்களே, உண்மையில் அந்த நெருப்பாலா அவர் லங்கா தகனம் செய்தார்? இல்லவே இல்லை. அந்த நெருப்புக்குள்ளேயே இன்னொரு நெருப்பை அவர் சேர்த்துக்கொண்டு இதனால்தான் ஊரை எரித்தார். சீதையின் சோகாக்னிதான் அது.
‘ஆஞ்சநேயருக்கு வாலில் நெருப்பை வைத்தும் கொஞ்சங்கூட அவரை அது சுடவில்லை. சீதையின் அனுக்கிரஹத்தால் அப்படியிருந்தது’ என்று மாத்திரம் நமக்குத் தெரியும். ஆனால்,ஊரையெல்லாம் எரிக்கிற பெரிய சக்தி அதற்கு வந்ததே அவளுடைய சோகத்தைத் தான் ராவணன் நெருப்பு என்ற ரூபத்தில்வைத்ததால் தான்! ஆஞ்ஜநேயர் வாலில் நெருப்பு வைக்கணும் என்ற எண்ணம் அவனுக்கு ஏன் வந்தது? அவனுக்கு அந்த எண்ணம் வருகிற நேரத்தில் சீதை அதற்கு மேலும் சோகாக்னியில் வாடினால் பிரபஞ்சமே தாங்காது என்ற கட்டம் வந்தது.
அது எப்படியாவது வெளியே வந்து செலவாகும்படி செய்ய வேண்டும். அதை யாராவது தாங்கிக்கொண்டு வெளியிலே விட்டுவிட வேண்டும். யாரால் தாங்க முடியும்? ஆஞ்சநேய சுவாமியைத் தவிர யாராலும் முடியாது. இதனால்தான் அவரைத் தண்டிக்கணும் என்று ராவணனுக்குத் தோன்றியபோது ஈச்வர சங்கல்பத்தால், ’வாலில் நெருப்பு வைத்தாலென்ன?’ என்று தோன்றிற்று. இப்படி ஆஞ்சநேயர் ஜநகாத்மஜாவின் சோக வந்ஹியை வாங்கிக் கொண்டே லங்கையை அதனால் தகனம் செய்தார். அது சாதுக்களை, சஜ்ஜனங்களைக் கஷ்டப்படுத்தாமல் துஷ்டர்களை மட்டும் தண்டிக்கும்படி செய்தார்.
ராமருக்கு ஆஞ்ஜநேயர் செய்த மஹா உபகாரம் சீதை இருக்குமிடத்தைக் கண்டுபிடித்துச் சொன்னது. சீதைக்கு அவர் செய்த மகா உபகாரம் ராமர் எப்படியும் வந்து அவளை மீட்டுக்கொண்டு போவார் என்று அவள் உயிரைவிட இருந்த நேரத்தில் சொன்னது. இவ்வாறு இரண்டு பேரும் பலமே போனாற்போல இருந்தபோது பலம் தந்திருக்கிறார். ஆனால் இந்த இரண்டையும் அவர் எதைக்கொண்டு, எதன் பலத்தில் பண்ணினார்? ராமநாம பலத்தினால்தான் பண்ணினார்!
ஆஞ்சநேயருக்குக் கிடைத்த பரிசு
ஆஞ்சநேயரால்தான் தாங்கள் காப்பாற்றப் பட்டது போல் ராமரும் சீதையும் சொல்லிக்கொண்டார்கள். சீதையின் ப்ராணனை ரக்ஷித்துக் கொடுத்தது, சீதைக்கும் மேல் தமக்கு ப்ரியமான லக்ஷ்மணன் மூர்ச்சையாய் விழுந்தபோது சஞ்ஜீவி கொண்டுவந்து அவனை எழுப்பினது முதலானவற்றுக்காகத் தாம் ஆஞ்சநேயருக்குத் தீர்க்க முடியாத நன்றிக்கடன் பட்டிருப்பதாகவேராமர் எப்போதும் சொல்வார். “ஆஞ்ஜநேயருக்கு எப்படி என்ன ப்ரத்யுபகாரம் பண்ணுவோம், பண்ணுவோம்?” என்றே சீதைக்கும் சதா இருந்தது.
அயோத்தியில் கோலாகலமாகப் பட்டாபிஷேகம் ஆனவுடன், ராமர் பலருக்குப் பல பரிசு தரும்போது ஒரு முக்தாஹாரத்தை சீதைக்குப் போட்டார். அவள் அதைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டு, சுற்றியிருந்த அத்தனை பரிவாரங்களையும் பார்த்துவிட்டு ராமரையும் அர்த்த புஷ்டியோடு பார்த்தாள். இரண்டு பேரும் ஒரே சித்தம் கொண்ட தம்பதி.
சீதை ராமரைப் பார்த்த பார்வையாலேயே முக்தாஹாரத்தை அந்தப் பரிவாரத்திலே யாருக்குக் கொடுக்கலாம் என்பதற்கு அவருடைய அபிப்ராயத்தைக் கேட்டுவிட்டாள். உடனே ராமர், “பராக்ரமம், புத்தி, பணி எல்லாம் எவனுக்குப் பூர்ணமாக இருக்கிறதோ, அவனுக்கே கொடு” என்றார். ராமர் இப்படிச் சொன்னவுடன் சீதை மாலையைஆஞ்சநேயருக்குக் கொடுத்துவிட்டாள்!
ஒரு பெரிய மலைக்கு மேலே சந்திரிகையில் தாவள்யமாயிருக்கும் ஒரு மேகம் படிந்தால் எப்படியிருக்குமோ அப்படி அந்த முத்துமாலை ஆஞ்சநேய ஸ்வாமியின் பெரிய சரீரத்திலே புரண்டது.
முதல் முதலாக அவரை ரிச்யமுக பர்வதத்தில் பார்த்த வுடனேயே ராமசந்திரமூர்த்தி, இவரால்தான் இனி ராமாயணம் நடந்தாக வேண்டும் என்று தீர்மானம் பண்ணி விட்டார். அப்போது ஹனுமாரைச் சகாயமாகப் பெற்றிருந்தும் சுக்ரீவன் பெண்டாட்டியை இழந்து வாலியிடம் கஷ்டப் பட்டுக்கொண்டிருந்தான். ராமர் இன்னார் என்று வேவு பார்த்து, அவர் நல்லவர், சக்தி உள்ளவர் என்று தெரிந்ததால் அவரைத் துணையாகக் கொண்டு வாலியை ஜயிக்க வேண்டும் என்பதற்குத்தான் ஹனுமாரை அவரிடம் அனுப்பியிருந்தான்.
இப்படிப்பட்ட நிலையில் சந்தித்த போதிலும் ராமருக்கோ தனக்கேபலமாக இருக்கப் போவது இந்த ஹனுமார்தான் என்று தெரிந்துவிட்டது. அவரே ஈச்வரனாகயிருந்து பூர்வத்தில் பண்ணின சங்கல்பம்தானே இப்படி இப்படி இந்த ராமாயண நாடகம் நடக்கவேண்டுமென்று?
அதனால் இவர்களை யார் என்ன என்று ஆஞ்சநேயர் விசாரித்த தினுசிலேயே அவர் இவர் பெருமையை எடை போட்டு, “நவவ்யாகரண பண்டிதன், சொல்லின் செல்வன்” என்றெல்லாம் லக்ஷ்மணனிடம் ஏகமாகப் புகழ்கிறார். “ஏதோ வாக்குவன்மை படைத்தவன் தான் என்று நினைத்துவிடாதே! இவன் சர்வ வல்லமையும் படைத்தவன். இந்த லோகம் ஒரு தேர் என்றால் அதற்கு அச்சாக இருக்கிற ஆணி இவன்தான். இப்போது தெரியாவிட்டாலும் உனக்கே இதன் உண்மை நாள் தெரியும் பார்”என்கிறார்.
ராமாயணத்தில் சர்வ காரிய சித்தி என்று சகலராலும் பாராயணம் செய்யப்படுவது எது என்றால் ராமருடைய பெருமைகள் தெரிகிற பாக்கி ஆறு காண்டமில்லை; ஆஞ்சநேய ப்ராபவமேவிஷயமாயுள்ள சுந்தர காண்டம்தான்! அப்படி இவரைப் பார்த்தவுடனேயே “ராமாயணத் தேரை இனிமேல் நீயே கொண்டுபோ” என்று ராமர் கொடுத்துவிட்டார்.
தம்முடைய நாமாவை அவர் மூலம் வெளியிட்டே சீதை உயிரை விடாமல் காப்பாற்றினார். தம்முடைய நாமாவினாலேயே அவர் பரம சுலபமாக சமுத்திரத்தைத் தாண்டச் செய்தார். தாமே லங்கைக்குப் போகிற போதோ கஷ்டப்பட்டு அணை கட்டிக்கொண்டு அதன் மேல் நடந்துதான் போனார்!
பரஸ்பர நன்றியுணர்வு
“தாம் செய்வதெல்லாம் ராமர் போட்ட பிச்சையே! சீதாதேவியின் அனுக்ரஹ லேசமே!” என்றுதான் ஆஞ்சநேயர் நினைத்தார். ‘ஸாகரதரணமும், லங்கா தஹனமும் தன் காரியமென்று லோகம் கொண்டாடுகிறதே! நிஜத்தில் அவருடைய நாமம் – தாரக நாமமல்லவா தரணம் பண்ணுவித்தது? அவளுடைய சோகமே அல்லவா தகனம் பண்ணிற்று?” என்றே நினைத்தார். தங்கள் காரியத்துக்கு நம்மையும் ப்ரயோஜனப்படுத்திக் கொண்டார் களே என்று சீதாராமர்களிடம் ஒரே நன்றி, தீர்க்க முடியாத நன்றிக் கடன்பட்டிருப்பதாகவே நினைத்தார்.
நமக்கானால், நன்றி வாங்கிக் கொள்வதில் போட்டி! ‘நாம் பலருக்கு உபகரித்தோம். யாரும் சரியாக நமக்குத் திருப்பவில்லை’ என்று அபிப்ராயம்! சீதா-ராமர்களுக்கும் ஆஞ்சநேயருக்குமோ பரஸ்பரம்மற்றவரால்தான் தங்களுக்கு பலம், அவருக்குத் தாங்கள் ப்ரத்யுபகாரமே பண்ணி முடியாது என்று அபிப்ராயம்.
இது ராமாயணத்திலே நமக்கு ஒரு பெரிய பாடம்.
(தெய்வத்தின் குரல் மூன்றாம் பகுதி)